இருமுடி : வினியோக உரிமை வாங்கி அதிகம் சம்பாதித்த ரவி தேஜா
இந்தியத் திரையுலகத்தில் சமீப காலங்களில் ஹீரோக்களின் சம்பளம் குறித்த பேச்சுக்கள், விவாதங்கள் திரையுலகத்தில் அதிகமாக எழுந்து வருகிறது. சம்பளமாக வாங்காமல் வியாபாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் முன்னணி ஹீரோக்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதை தென்னிந்தியத் திரையுலகத்தின் தயாரிப்பாளர்கள் விவாதித்து பேசி வந்தார்கள். அது குறித்து இறுதியான முடிவு எதுவும் இன்னும் எட்டப்படவில்லை.
தெலுங்கில் சமீபத்திய பெரிய வெற்றியாக ரவி தேஜா நடித்து வெளிவந்த 'இருமுடி' படம் அமைந்தது. அப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது படத்தின் நாயகன் ரவி தேஜாவுக்கு சுமார் 7 அல்லது 8 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசினார்களாம். அதோடு தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய வினியோக ஏரியாவான நிஜாம் பகுதியையும் சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதாக தயாரிப்பாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்த ரவி தேஜா, சம்பளத்தில் கூடுதலாக 6 கோடி மட்டும் சேர்த்து மொத்தமாக 13 கோடி சம்பளமாகக் கொடுத்து விடுங்கள் என்றாராம். பேச்சுவார்த்தை முடிவில் நிஜாம் ஏரியாவை ரவி தேஜா பெற்றுக் கொள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
அன்று அந்த ஏரியாவை ஏற்க மறுத்த ரவி தேஜாவுக்கு இன்று அந்த ஏரியா மூலம் 10 மடங்கு அதிகமாக 60 கோடி வரை வசூல் வருவாய் வரும் என்கிறார்கள். தற்போதைய வசூல் 50 கோடியைக் கடந்துவிட்டதாம்.
6 கோடி மட்டுமே கேட்டவருக்கு 60 கோடி கிடைக்க உள்ளது. இதுதான் சினிமாவின் அதிர்ஷ்டம். தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் 'கரகாட்டக்காரன்' படத்திற்கு இப்படித்தான் வசூல் கொட்டோ கொட்டு என்று கொட்டியது.