முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜூ?
எக்ஸ் தளம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் கியூட்னெஸ் ஓவர்லோடட், கியூட்னெஸ் அன்லிமிடட் என்கிற டைட்டில்களில் மமிதா பைஜூவின் துண்டு துண்டு வீடியோக்கள் வைரல் விழா கண்டு வருகின்றன. அவ்வீடியோக்களுக்கு வெரைட்டியான ஹார்டின்களும் பின்னூட்டங்களில் காதல் ரசம் சொட்டும் கமெண்டுகளுக்கும் பஞ்சமில்லை.
முதல் இடத்தை நோக்கி முன்னேறுகிறாரா மமிதா பைஜு ? என்று மற்ற நடிகைகளுக்கு ஹார்ட் பிரேக்கிங் தரும் செய்திகளும் கிளம்பத்துவங்க, அடுத்து ரசிகர் மன்றங்களும் மமிதா ஆர்மிகளும் கட்டியெழுப்பப்படவேண்டியது ஒன்றுதான் பாக்கி.
'பிரேமலு' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தபோது கூட அவ்வளவாய் முக்கியத்துவம் பெறாத இந்த மமிதா பைஜூ திடீரென டாப் ரேஞ்சுக்கு வந்த காரணம் அடுத்தடுத்து ரிலீஸாகி வெற்றிபெற்ற 'ஜனநாயகன்', 'விஸ்வநாதன் அன் சன்ஸ்', 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய மூன்று படங்கள். மூன்றுமே 200 கோடி வசூலைத் தாண்டிய படங்கள் என்பது இன்னொரு ப்ளஸ் என்றால் மூன்று படங்களுமே மமிதாவை மைய்யப் பாத்திரங்களாகக் கொண்ட கதைகள்.
விஜய், சூர்யா, நிவின் பாலி என்று மூன்று முன்னணி நடிகர்கள் இருந்தபோதும், இந்த மூன்று படங்கள் குறித்தும் எழுதப்பட்ட 90 சதவிகித விமர்சனங்களில் மமிதாவே முதலிடத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டார்.
சினிமாவில் பொதுவாக கதாநாயகிகள் ஷோகேஸ் பொம்மைகளாக ஆகிவரும் நிலையில் மமிதாவின் இந்தக் கதைத் தேர்வுகள் அல்லது அவர் இந்தக் கதைகளுக்காக தேர்வு செய்யப்பட்டது என்பதுதான் அவரை இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்ற இடத்தை நோக்கி நகர்த்தி வருகிறது.
யார் இந்த மமிதா
ஸோ, இந்த சந்தர்ப்பத்தைக் காரணமாகக் கொண்டு அவரது முன் கதைச் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது.
மமிதா பைஜு கிருஷ்ணன். ஜூன் 22 , 2001ல் கேரள, கோட்டயம் மாவட்ட கிடங்கூரில் பிறந்த 2கே கிட்.
அச்சன் பைஜு கிருஷ்ணன். டாக்டர். அம்மே மினி. ஒர் சேட்டன் மிதுன்.
இளம் வயதில் மமிதாவுக்கு சினிமா ஆசைகள் இருக்கவில்லை. அப்பாவின் வழியில் டாக்டராக விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் சினிமா செய்த அதிர்ஷ்டம் அவர் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டை முடிக்கவில்லை.
சினிமா பயணமும்... வளர்ச்சியும்...
மமிதா பைஜுவின் அதிகாரப்பூர்வ திரைப்பட அறிமுகம் 2017-ல் வெளியான 'சர்வபோக்கரி பாலக்காரன்' திரைப்படத்தின் மூலம் நடைபெற்றது. இதன் மூலம் மலையாள சினிமாவில் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார். ஆனால் ஆரம்ப காலத்தில் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைக்கவில்லை. சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அனுபவத்தை வளர்த்துக் கொண்டார். 2021ல் வெளியான 'ஆபரேசன் ஜீவா'தான் மமிதா பைஜு என்கிற நடிகையை திரையுலகிற்கு அடையாளம் காட்டியது. அப்போதெல்லாம் அவருக்கு சம்பளம் ஆயிரங்களில்தான்.
அடுத்தடுத்து அவர் நடித்து வெளியான 'கோ கோ', 'பிரணய விலாசம்', 'ராமச்சந்திரா பாஸ் அன் கோ', 'சூப்பர் சரண்யா' படங்களின் மூலம் மெல்ல ஏணியைப் பிடித்து முன்னேறிக் கொண்டிருந்தவருக்கு பெரும் ஜாக்பாட்டாய் வந்து அமைந்த படம் 'பிரேமலு'. இந்த ஒரே படத்தின் மூலம் தென்னிந்தியா முழுக்க புகழ் பெற்ற நடிகையானார் மமிதா.
அடுத்து பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேர்ந்த 'டியூட்' பட வெற்றி அவரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது. அதாவது லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் இப்படத்துக்குப் பின்னர்தான் கோடிகளுக்கு முன்னேறினார். முன்னர் நடித்த குட்டி குட்டிப் பாத்திரங்களைத் தவிர்த்துப் பார்த்தால் மமிதாவின் திரைப்பயணம் என்பது சுமார் ஐந்தாண்டுகள்தான்.
சர்ச்சைகளில் சிக்காதவர்
இந்த ஐந்து ஆண்டுகளில் மற்ற நடிகைகளைப் போல் இவர் கிசுகிசுக்களில் சிக்கவில்லை. யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டால், பள்ளிக்காலத்தில் பருவமெய்தாத காதல் ஒன்று தோன்றி மறைந்தது. அடுத்து வந்தால் நிச்சயம் சொல்லி அனுப்பிகிறேன்' என்கிறார் வெளிப்படையாக.
இதுபோக பாலாவின் 'வணங்கான்' படத்திலிருந்து வெளியேறியபோது அவர் சில புகார்களை கூறினார். பின்னர் சில தினங்களிலேயே ' என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன' என்று வாபஸ் வாங்கினார். ஐந்து வருட காலங்களில் சுமார் 15 படங்களில் நடித்தவர் கைவசம் இப்படி ஒரே ஒரு சர்ச்சைதான் இருக்கிறது என்பதே சினிமாவில் ஒரு ஆச்சரியம் தான்.
நல்ல கதைகள் கிடைத்ததைத் தாண்டி மமிதாவின் சினிமா மீதான சின்சியாரிட்டியால் தான் இந்த இடத்திற்கு வரக்காரணம் என்பதோடு சேர்த்துதான் ரசிகர்கள் அவரைக் கொண்டாடத் துவங்கியிருக்கிறார்கள் போல. இதன் அடுத்த கட்டமாக அவருக்கு ரசிகர் மன்றங்களும் ஆர்மிகளும் துவங்கப்படலாம். இந்த மன்றங்கள், ஆர்மிகளில் சேரத் தயங்கும் சில மூத்த முரட்டு சிங்கிள்களுக்கு ஒரு சீயர்ஸ் செய்தி. எப்போதும் நம்பிக்கை இழக்க வேண்டாம். ஏனென்றால் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்', 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய இரு படங்களிலும் தன்னை விட பத்துப்பனிரெண்டுகள் வயது மூத்த முரட்டு சிங்கிள்களைத்தான் விரட்டி விரட்டி காதலித்து கையைப் பிடித்தார் மமிதா.