சாலமன் பாப்பையா காலமானார்
பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், ‛சிவாஜி' உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவருமான சாலமன் பாப்பையா, 90, உடல்நலக்குறைவால் மதுரையில் காலமானார்.
மதுரை சேர்ந்த பிரபல தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா. மதுரை, திருமங்கலம், சாத்தங்குடியில் 1936ம் ஆண்டு பிப்., 22ல் பிறந்த இவர் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேரராசிரியாகப் பணிபுரிந்தவர். இனிய தமிழில் நகைச்சுவை கலந்து பேசக்கூடியவர். குறிப்பாக பட்டிமன்றத்தில் இவரது நகைச்சுவை கலந்த பேச்சும், சிந்திக்க வைக்கக்கூடிய இவரது அறிவுத்திறனும் அனைவரையும் ஈர்க்க கூடியதாக இருக்கும்.
திருக்குறளுக்கும், சங்க இலக்கிய பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். ஷங்கர் இயக்கிய பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் இன்னும் பல விருதுகளை வென்றுள்ளார்.