ஹபீபி
தயாரிப்பு: நேசம் என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம்: மீரா கதிரவன்
நடிப்பு: கஸ்துாரிராஜா, ஈசா, அனஸ்ரேயாராஜன், தனஸ்ரீசுதாகரன்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இசை: சாம் சி.எஸ்.
வெளியான தேதி: ஜூன் 12, 2026
நேரம்: 2 மணி 14 நிமிடங்கள்
ரேட்டிங்: 3 / 5
நெல்லை மாவட்டம் கடையநல்லுார் பகுதியில் 1980களில் வசிக்கும் ஒரு இஸ்லாமிய குடும்ப பின்னணியில் நிகழும் கதை ஹபீபி. கஸ்துாரிராஜா, அவர் தம்பியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறார், நெசவு தொழில் செய்கிறார். விசைத்தறி காரணமாக அந்த தொழில் பாதிப்படைய, அவர் தம்பி வெளிநாடான ரியாத்துக்கு வேலைக்கு செல்கிறார். கஸ்துாரிராஜா மகன் ஈசா உள்ளூரில் காதல், ஊர்பாசம் என சுற்றிக்கொண்டிருக்க, சூழ்நிலை காரணமாக அவனும் வெளிநாடு செல்கிறான். அந்த குடும்பம் ஓரளவு வசதியாகிறது. ஊர் திரும்பிய ஈசாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதில் ஏகப்பட்ட தடைகள். நிறைய குடும்ப சிக்கல்கள். ஈசா திருமணம் நடந்ததா? அவன் மீண்டும் வெளிநாடு சென்றானா? முதல் காதலி என்னவானார்? இதுதான் ஹபீபி கதை. அரபியின் ஹபீபி என்றால் என் அன்பே என அர்த்தம்.
கதைப்படி, குடும்ப தலைவரான யூசுப் என்ற கஸ்துாரிராஜா கேரக்டரை சுற்றி கதை தொடங்குகிறது. வீட்டில் தறி வைத்து லுங்கி தயாரிக்கிறார்கள். அந்த பின்னணி, அவரின் குடும்ப பிரச்னைகள், தம்பி மற்றும் மகனுக்காக அவர் கலங்குவது பீல் பண்ண வைக்கிறது. இடைவேளைக்குபின் அவர் கேரக்டர் கொஞ்சம் அழுத்தம் குறைவு என்றாலும் அவரின் முடிவு, அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் கண்கலங்க வைக்கின்றன. ஹீரோவாக வரும் புதுமுக ஈசா டீன்ஏஜ் பையன், சிலமுறை வெளிநாடு சென்று விட்டு ஊரில் செட்டில் ஆக நினைக்கிறவர் என இரண்டு கெட்அப்பில் நடித்து இருக்கிறார். டீன்ஏஜ் காட்சிகளில் குறும்பு, காதல் காட்சிகள் ஒரு பீல் இருக்கிறது. ஒரு பிரச்னையில் சிக்கி அவமானப்படும்போது அழுத்தமான நடிப்பை தந்து இருக்கிறார்.
பிற்பாதியில் குடும்ப பிரச்னை, திருமண ஏற்பாடுகள், அதில் உருவாகும் சிக்கல்கள் என சிறப்பாக நடித்து இருக்கிறார். ஹபீபி படத்தின் பெரிய பலமே, பாட்டி, அம்மா, சித்தி, காதலி, அவர் அம்மா, தங்கை, திருமணத்துக்கு ஓகே சொல்லும் புரட்சிகர சிந்தனை உள்ள பெண், தோழிகள் போன்ற பெண் கேரக்டர்கள்தான். இஸ்லாமிய பின்புலத்தில் இந்த கேரக்டர்கள், அவர்கள் நடை, உடை, வசனங்கள், அவர்களின் கோபம், உணர்வுகள் என அனைத்தையும் அவ்வளவு இயல்பாக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்த பெண்களின் உணர்வுகள், கோபம், பாசம் படத்தை நெருக்கமாக்குகிறது.அந்த கேரக்டர்களை பார்க்கும்போது நம் குடும்பத்திலும், ஏரியாவிலும் இப்படியொருவர் இருந்தார்களே என்ற உணர்வு வருகிறது.
குறிப்பாக, ஹீரோவின் சின்ன வயது காதலியாக வரும் மாளவிகாமனோஜ் அதிகம் பேசாமல் அழகாக நடித்து இருக்கிறார். ஹீரோவின் சித்தியாக வரும் மலையாள நடிகை அனஸ்ரேயா ராஜன் இளமையான, நடுத்தர வயது என இரண்டு கெட்அப்பில் வருகிறார். அவர் நடிப்பும், ஏக்கமும், கோபமும் பிரமாதம். குறிப்பாக, ஒரு இடத்தில் தனது நகைகளை கழட்டி கொடுக்கும் இடத்தில் தியேட்டரே கண்கலங்குகிறது. அதேபோல், இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் படித்த, பெண்ணுரிமை பேசுகிற பெண்ணாக தனஸ்ரீ வருகிறார். அவர் உற்சாகமும், கேட்கிற கேள்வியும், எடுக்கிற முடிவும் யாரும் எதிர்பாராதது. இவர்களை தவிர, ஸ்கூல் டீச்சராக வருபவர், கஸ்துாரிராஜா மற்றும் ஹீரோ ஈசா நண்பர்கள், சித்தப்பாவாக வருகிறவர், ஊர்க்காரர்கள், பணத்தை ஏமாற்றுகிறவர்கள் என பல கேரக்டர்களின் நடிப்பு, பின்னணியை சினிமாதனம் இல்லாமல் இயல்பாக கொடுத்து இருப்பது படத்துக்கு பிளஸ். பல புதுமுகங்களை நடிக்க வைத்து இருப்பது இன்னும் பிளஸ்.
அந்த கால கிராமத்தை, இஸ்லாமிய தெருக்களை, பள்ளிவாசல், திருமணம், இறுதிசடங்கு, தறி நெய்வதை அழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, அதேபோல், சூழ்நிலை, கதைதன்மை உணர்ந்து இசை, பாடல்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார் சாம்.சி.எஸ். 'கப்பலுக்கு போன மச்சான்' பாடலையும், 'நாகூர் அனிபா' பாடலையும் தகுந்த இடத்தில் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் ரசனையை காண்பிக்கிறது. தறி நெசவு, கூட்டுகுடும்ப பிரச்னைகள், வெளிநாடு வாழ்க்கை, காதல், உறவு சிக்கல்கள், அன்பு, நவீன தாக்கம் என பல விஷயங்களை கலந்து அழுத்தமான கதை கொடுத்திருக்கிறார் கதாசிரியர் முகமதுஅமீன். கலை இயக்குனர் அப்புண்ணி வொர்க்கும் அபாரம்.
திருநெல்வேலி பின்னணியில் நடப்பதால் அந்த வட்டார நடை, சில வசனங்களை டக்கென புரிவதில் சிரமம் இருக்கிறது. இடைவேளைக்குபின் சில சீன்கள் மெதுவாக நகர்கிறது.திருமண ஏற்பாடுகள் சீன் இழுக்கிறது. கிளைமாக்சை டக்கென முடித்துவிட்டாரோ, இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என தோன்றுகிறது. ஆனாலும், தமிழ்சினிமாவில் இஸ்லாமிய குடும்ப கதைகளை, அவர்களின் வாழ்க்கை முறை, வலி, பாசம், வேதனை, சந்தோஷம், தியாகத்தை இப்படி அழுத்தமாக யாரும் சொன்னது இல்லை. அந்த வகையில் ஹபீபி முக்கியமான பதிவாக இருக்கிறது. 1980களில் நடக்கும் கதை, 2023 வரை விரிகிறது. ஒரு குடும்பத்தை பற்றிய கதையாக இருந்தாலும், இதுவரை சொல்லாத பல இஸ்லாமிய குடும்பங்கள், நடைமுறைகள், அவர்கள் வாழ்க்கையை ஹபீபி பதிவு செய்துஇருக்கிறது. மற்றபடி தேவையில்லாத விஷயங்கள், அரசியல், மத சண்டைகள் என எதையும் தொடவில்லை. அது படத்தின் மீதான பார்வையை உயர்த்துகிறது. ஒரு உணர்வுபூர்வமான சிறுகதையை படித்த உணர்வு. இந்த படத்தின் கரு, நடித்த நடிகர்களின் முகங்கள், அவர்கள் பேசும் டயலாக் பல ஆண்டுகள் நம் மனதில் நிற்பது உறுதி.
ஹபீபி - அழுத்தமான உணர்வுபூர்வமான பதிவு