ஆட்டி
தயாரிப்பு: லட்சுமி கிரியேஷன்ஸ்
இயக்கம்: எல்.கிட்டு
நடிப்பு: இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல்சுகுமார், செல்வகுமார், பிரவீன் பழனிசாமி
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
இசை: தீசன்
வெளியான தேதி: ஜூன் 12, 2026
நேரம்: 1 மணி 34 நிமிடங்கள்
ரேட்டிங்: 1.5 / 5
டீ எஸ்டேட்கள் சூழ்ந்து இருக்கும் ஒரு மலைப்பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் இசக்கி கார்வண்ணன். அந்த ஏரியாவில் குற்றங்களே நடக்காமல் இருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறார். பின்னே எதற்காக இந்த பெரிய போலீஸ் ஸ்டேஷன் என கேட்கிறார். அந்த சமயத்தில் ஊருக்கு ஆசிரியராக வரும் இளைஞனான பிரவீன் பழனிசாமி கொல்லப்பட, அந்த வழக்கை விசாரிக்கிறார். அப்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களை முகமூடி அணிந்த 5 பேர் கொடூரமாக கொல்வார்கள். அது அந்த ஊர் வழக்கம் என்பதை கண்டறிகிறார். அந்த 5 பேர் யார்? அவர்கள் பின்னணி என்ன? ஆசிரியர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பதற்கான விடையை சொல்லும் கதை ஆட்டி. 1970களில் இந்த கதை நடக்கிறது.
ஒரு மலைவாழ் கிராம மக்களின் எளிய வாழ்க்கை, அந்த கிராமத்துக்கு வரும் ஆசிரியரின் கொலை, அதை செய்தது யார்? செய்தது ஏன் என்ற திரில்லர் பாணியில் கதை நகர்கிறது. இந்த கதையை ராஜா காலத்தில் நடந்த சம்பவம், பெண்கள் குல தெய்வமாக இருப்பது ஏன்? பெண்களின் சக்தி, புரட்சி பெண்கள் படை என பல விஷயங்களை கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஆட்டி என்றால் பெண் தெய்வம், பெண்கள் வழி சமூகம், பெண்களின் படை என்ற அர்த்தத்தில் இந்த தலைப்பு.
மலை பகுதியில் வசிக்கும் மக்கள், ஒரு பள்ளிக்கூடம், போலீஸ் ஸ்டேஷன், சில மர்மமான விஷயங்கள் என கதை பெரிய பில்டப்புடன் தொடங்குகிறது. சில காட்சிகள் மட்டும் மதுரையில் நடக்கிறது. பீரியட் படமாக கதை நடப்பதால் செல்போன், நவீன தொந்தரவு இல்லாமல் காட்சிகள் அமைதியாக நகர்கின்றன. அதுவே சில சமயம் பொறுமையை சோதிக்கிறது. கதை நாயனாக போலீசாக வரும் இசக்கி கார்வண்ணன் நடக்கிறார், ஜீப் ஓட்டுகிறார், கொஞ்சம் விசாரிக்கிறார். ஆனால், படத்தில் அதிகம் நடிக்கவில்லை. மலைவாழ் மக்கள் உடை, பேச்சு செயற்கை தனமாக இருக்கிறது. அந்த பேர் கொண்ட படை, அவர்கள் செயல்முறைகள் சுவாரஸ்யம்.
அபி நட்சத்திராதான் படத்தில் தெரிந்த முகம். அவர் அறிமுகம், அவர் கெட்அப், அவருக்கான பில்டப் ஓவராக இருக்கிறது. அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார். அவருக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கும், அவர் கதையில் திருப்புமுறையை ஏற்படுத்துவார் என நினைத்தால், அங்கேயும் ரசிகர்களை ஏமாற்றி கதையை குழப்பியிருக்கிறார் இயக்குனர். கொலையான ஆசிரியராக வரும் பிரவீன் சில சீன்களில் வந்தாலும் ஒருவித புதுவித நடிப்பை தந்து இருக்கிறார். மறைந்த செல்வகுமார் போலீசாக வந்து ரசிக்க வைக்கிறார். காதல் சுகுமார் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் செட் ஆகவில்லை. போஸ்ட் மேனாக சவுந்தர் வந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ தம்பிதான், அந்த வாத்தியார் என கதை செல்கிறது. அந்த எம்.எல்.ஏ சம்பந்தப்பட்ட சீன்கள், வசனங்களும் எரிச்சல் அடைய வைக்கிறது. மதுரை போலீஸ் விசாரணை காட்சிகள் ஓகே. மதுரை ஆராய்ச்சி மாணவி, அவர் சொல்லும் விஷயங்கள், அடுத்து நடக்கும் சம்பவங்கள் ஆறுதல்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை செய்பவர்களை, பாலியல் தொந்தரவு செய்பவர்களை பெண்களால் அமைக்கப்பட்ட ஒரு குழு கொல்லும், அது காலங்காலமாக இருக்கிறது என்பதை ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி, சில விஷயங்களை குழப்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். தீசன் இசை, சிபி ஒளிப்பதிவு ஓகே. ஆனால், கதை தேர்வு, திரைக்கதை, நடிகர்கள் என அனைத்திலும் மைனஸ். ஆரம்பம் முதல் கடைசிவரை ஒருவித அமைதியான டோனுடன் கதை செல்கிறது. அந்த வேகம் இல்லாத, நீளமான காட்சிகள் கொண்ட கதை சொல்லும் முறை போராடிக்கிறது. கிளைமாக்சில் பல கேள்விகளுக்கு விடை சொல்லாமல் பார்ட்2வில் பார்க்கலாம் என டக்கென முடித்ததும் ஏமாற்றம். எங்கள் குலத்தில் பெண்களே முதலாமானவர்கள், அவர்களுக்கே சக்தி என்ற ஒரு நல்ல கருவை எடுத்து அதை சொல்ல தெரியாமல் ஏதோ சொல்லி ரசிகர்களை குழப்பியிருக்கிறார்கள். படம் முழுமையாக முடிவடையாமல் தத்தளிக்கிறது.
ஆட்டி - தலைப்பும் புரியலை, கதையும் புரியலை