உள்ளூர் செய்திகள்

நிழல் (2026)

தயாரிப்பு : ஏ.கே . மூவிஸ்
இயக்கம் : ஏ.கே.குமார்
நடிப்பு : ஸ்ரீவிசாகன், ஜனனி, கவுசிக், ரமேஷ்கண்ணா, ஹரிவிஜய்
ஒளிப்பதிவு : மோகன்குமார் பழனிவேல்
இசை : அபு பக்கர்
வெளியான தேதி : ஜூன் 12, 2026
நேரம் : 1 மணிநேரம் 41 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

தொழிலதிபர் சிவன் சீனிவாசன் மகன் விஜய் ஹரி மற்றும் அவர் நண்பர்கள் இருவரை ரமேஷ்கண்ணா மகள் பிக்பாஸ் ஜனனி கொடூரமாக தாக்கி ஆஸ்பிட்டலில் சேர்க்கிறார். தொழிலதிபர் மனைவி தனது மகன் தாக்குதல் குறித்து ஒரு போலீஸ் அதிகாரி உதவியுடன் விசாரிக்கிறார். அப்போது ஜனனி குறித்து பல அதிர்ச்சிகர உண்மைகள் தெரியவர, ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது தெரிகிறது. அந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்ல என்ன நடக்கிறது. ஜனனி அப்படி செய்து ஏன்? கோர்ட்டில் என்ன தீர்ப்பு வந்தது என்பது நிழல் பட கதை.

பிக்பாஸ் ஜனனி கதை நாயகியாக நடித்த படம். முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அந்த இரட்டை வேடம் என்பது கதைக்கு முக்கியமான விஷயம். இரண்டு வேடத்திலும் ஓரளவு சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிலும் டாக்டராக வரும் கேரக்டர் மனதை உருக்குகிறது. இன்னொரு கேரக்டரில் பதற வைக்கிறது.

அவர் ஜோடியாக வரும் விசாகனுக்கு ஆரம்பத்தில் அதிக வேலையில்லை. கிளைமாக்சில் வக்கீலாக சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். வில்லனாக வரும் விஜய் ஹரி, அவர் நண்பர்கள் நடிப்பு, அவர் செய்யும் செயல்கள் கொடூரம்.

ஜனனி அப்பாவாக வரும் ரமேஷ் கண்ணா பாசத்தை பொழிகிறார். வில்லன் அம்மா சீரியல் வில்லி மாதிரி வந்து போகிறார். இயக்குனர் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் கதையில் ஏகப்பட்ட சீரியல் ஆர்ட்டிஸ்ட். அபிஷேக், சபீதா ஆனந்த், சிவன் சீனிவாசன் என ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். அவர்களும் சினிமா என்பதை மறந்து சீரியல் மாதிரியே நடித்து இருக்கிறார்கள். இயக்குனரும் சினிமா என்பதை மறந்து அவர்களை நடிக்க வைத்து இருப்பது படத்தின் மைனஸ்

ஜனனி கேரக்டர் ஆரம்பத்தில் ஏதோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறது. அடுத்த பல சீன்களில் இயக்குனர் கதைக்குள் செல்லாமல் தவித்து இருக்கிறது. கடைசி சில நிமிட திருப்பங்கள், கோர்ட் சீன் , கிளைமாக்ஸ் மட்டும் படத்தில் ஓகே ரகம்

ஜனனி குடும்பம் விவகாரம், வில்லன் குடும்ப திட்டம், போலீஸ் விசாரணை ஆகியவற்றில் உயிர் இல்லை. ஏதோ நடந்து இருக்கிறது என்ற சஸ்பென்சை இன்னும் விறுவிறுப்பாக காண்பித்து இருக்கலாம். சீரியஸ் ஆன கதை என்பதால் ஆடல், பாடல், காமெடி இல்லை. சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகவில்லை

அபுபக்கர் இசை ஓகே, ஆனால் சில பாடல் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. மோகன் குமார் ஒளிப்பதிவும் சுமார் ரகம்.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, அதிகார வர்க்கத்தின் அத்து மீறல், போலீஸ் பாரபட்சம் ஆகியவை குறித்த நல்ல கரு. ஆனால் எடுக்க தெரியாமல் எடுத்து இருக்கிறார்கள், நடிகர்கள் தேர்வு, நடிப்பு பெரிய மைனஸ். இப்படி பல கதைகள் வந்துள்ளது. நிழல் படத்தில் புதுசா எதுவும் இல்லை.

பெண்கள் மீதான தாக்குதலுக்கு கடும் தண்டனை வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து சம்பந்தப்பட்ட வர்கள் தப்பித்தாலும் அவர்களுக்கு தண்டனை தரப்பட வேண்டும் என்ற கரு மட்டும் மனதில் நிற்கிறது.

நிழல் - ஜனனி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதை தவிர வேறு பிளஸ் இல்லை



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !