உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / வரவு (மலையாளம்)

வரவு (மலையாளம்)

தயாரிப்பு ; வோல்கா புரொடக்ஷன்ஸ்
நடிப்பு : ஜோஜு ஜார்ஜ், சுகன்யா, சானியா ஐயப்பன், வாணி விஸ்வநாத், பாபுராஜ், முரளிகோபி, அர்ஜுன் அசோகன்,
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு : எஸ்.சரவணன்
இயக்கம்: ஷாஜி கைலாஷ்
நேரம் : 2 மணி 23 நிமிடங்கள்
வெளியான தேதி : ஜூலை 16, 2026
ரேட்டிங் : 2.25 / 5

கொலைக்குற்றத்தில் சிறைக்குச் சென்ற ஜோஜு ஜார்ஜ், தனது சகோதரி சுகன்யா கன்னியாஸ்திரியாக வெளிநாடு செல்வதால் அவரை வழியனுப்புவதற்காக பரோலில் சொந்த ஊருக்கு வருகிறார். ஆனால் அங்கே இருக்கும் பத்து நாட்களில் அவர் மீது புது வழக்கு போட அங்குள்ள எஸ்.ஐ பாபுராஜும், அவரை கொலைசெய்ய தொழிலதிபர் முரளிகோபியும் முயற்சிக்கிறார்கள். அப்படி அவர்களால் அனுப்பப்படுபவர்கள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். ஆனால் அவர்களைத் தாக்கியது ஜோஜு ஜார்ஜின் காணாமல் போன தம்பி அர்ஜுன் அசோகன் தான் என்று போலீசாரிடம் பலரும் சொல்கிறார்கள். ஜோஜு ஜார்ஜ் எதற்காக ஜெயிலுக்குப் போனார் ? பரோலில் வரும் அவரை எதற்காக கொல்ல முயற்சிக்கிறார்கள் ? அவரது தம்பி காணாமல் போனது எப்படி ? உண்மையில் அவர்தான் எதிரிகள் மீது தாக்குதல் நடத்துகிறாரா ? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்கிற கேள்விகளுக்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

ஒரு முரட்டுத்தனமான கிராமத்து மனிதராக ஜோஜூ ஜார்ஜ் கச்சிதமாக பொருந்துகிறார். அவரது தோற்றம், உடல்மொழி, பார்வை அனைத்தும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சேசிங் காட்சிகளில் வழக்கம்போல தனது முத்திரையைப் பதிக்கிறார். ஸ்டைலான வில்லனாக முரளி கோபி நன்றாக நடித்திருந்தாலும், தொடர்ந்து இதே மாதிரியான கதாபாத்திரங்களில் அவரைப் பார்ப்பது சிறிய சலிப்பை ஏற்படுத்துகிறது.

கன்னியாஸ்திரியாக வரும் சுகன்யாவுக்கு குறைந்த காட்சிகள் மட்டுமே இருந்தாலும் மனதில் நிற்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.யாக மாஸ் என்ட்ரி கொடுக்கும் வாணி விஸ்வநாத் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் ஹீரோவின் வீரத்தை ஏற்றுக்கொண்டு சல்யூட் அடிக்கும் அளவிலேயே அவரது கதாபாத்திரம் முடிந்துவிடுகிறது.

எஸ்.ஐயாக வரும் நடிகர் பாபுராஜ், கெட்ட போலீஸ் அதிகாரியாக நூறோடு நூற்றி ஒன்றாவது படம் எனச் சொல்லும் அளவிற்கு வழக்கம்போல தனது வேலையைச் செய்து விட்டுச் செல்கிறார். அர்ஜுன் அசோகனுக்கும் வலுவான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தால், பிளாஷ்பேக் காட்சிகளுக்குள் மட்டுமே அவர் சுருங்கிவிடுகிறார்...

கேரளா-தமிழக எல்லை மலைப்பகுதிகளின் இயற்கை அழகையும், அதில் நடைபெறும் அதிரடி சேசிங் காட்சிகளையும் ஒளிப்பதிவாளர் எஸ். சரவணன் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். சேசிங் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் தடதடக்க வைக்கிறது சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை.

பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ஷாஜி கைலாஷ் - கதாசிரியர் ஏ.கே.சாஜன் கூட்டணியிடம் ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு இந்த முறை முழுமையாக நிறைவேறவில்லை. கிராமத்து நாயகன், அவருக்கு நடக்கும் அநீதி, தவறாக சிறையில் அடைக்கப்படுவது, பின்னர் திரும்பி வந்து பழிவாங்குவது என்ற பழைய டெம்ப்ளேட்டையே மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் புதிய திருப்பங்களோ, எதிர்பாராத சுவாரஸ்யங்களோ இல்லாததால், இதே கதையை ஏற்கனவே பார்த்துவிட்டோமே என்ற அலுப்பு ஏற்படுகிறது.

ஜோசப், பணி போன்ற படங்களில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்த ஜோஜு ஜார்ஜும் இந்த முறை கதைத்தேர்வில் சற்று தடுமாறியிருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக தனது இடத்தை தக்கவைத்துள்ள ஷாஜி கைலாஷுக்கு, புதிய கோணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வாய்ப்பு இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தத் தவறியிருக்கிறார்.

வரவு - அசல் தேறலாம்.. லாபம் சந்தேகம் தான்..



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !