PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

'இவரால் நமக்கு நன்றாக பொழுது போகும்...' என, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பற்றி கூறுகின்றனர், பீஹார் மக்கள்.
இங்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., ஒரு கூட்டணியாகவும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கவுள்ளன.
ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கியுள்ள தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும், தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இப்போதே பிரசாரம் செய்து வருகிறார்.
முதல்வர் நிதிஷ் குமாரை மட்டுமே கடுமையாக தாக்கிப் பேசி வந்த பிரசாந்த், தற்போது லாலு பிரசாத் யாதவையும் விமர்சிக்கத் துவங்கியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'லாலு பிரசாத் யாதவை பார்த்து, நாம் அனைவரும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
'தன் வாரிசுகளின் எதிர்காலத்துக்காகவும், தன் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் ஆக்குவதற்காகவும் இந்த தள்ளாத, 77 வயதிலும் அவர் கடுமையாக உழைத்து வருகிறார்...' என்றார்.
இதைக் கேட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர், 'பிரசாந்த் கிஷோரால் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. ஆனாலும், மக்களை குஷிப்படுத்துவதற்காக எங்கள் தலைவரை தாக்கிப் பேசுகிறார்; பேசிவிட்டு போகட்டும்...' என, புலம்புகின்றனர்.