PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

'சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள்ளேயே சிறுபான்மையினர் ஓட்டுகளை வளைப்பதற்கான முயற்சியை துவக்கி விட்டனர்...' என, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை வறுத்தெடுக்கின்றனர், எதிர்க்கட்சியான பா.ஜ., தலைவர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வரும் 2028ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில், காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர்; இதற்காக சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் அரசியலை கையில் எடுத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன், அரசு திட்டப்பணிகளில், முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு, 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக, சித்தராமையா அறிவித்தார்; இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை பொருட்படுத்தாமல், தற்போது வீட்டு வசதி திட்டங்களில், சிறுபான்மையினருக்கு வழங்கப் பட்ட இட ஒதுக்கீட்டை, 10ல் இருந்து, 15 சதவீதமாக உயர்த்துவதாக சித்தராமையா அறிவித்து உள்ளார். சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இது, பா.ஜ., தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'மதத்தின் அடிப்படையில் நாட்டை துண்டாட முயற்சிக்கிறது, காங்கிரஸ் அரசு. வரும் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்...' என, அவர்கள் கொதிக்கின்றனர்.