PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசும்போது, 'மூன்றாண்டுகளில், 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம்' என, கூறியுள்ளார். 1 லட்சம் போராட்டங்களை மக்களிடம் திணித்தது யார்? 1 லட்சம் பிரச்னைகளை மக்களுக்கு கொடுத்துவிட்டு, நல்லாட்சி நடத்துகிறோம் என்று கூறுவது வெட்கக்கேடு.
டவுட் தனபாலு: நீங்க சொல்றது வாஸ்தவம் தான்... அரசு நிறைவேற்ற மறந்த கோரிக்கைகள், நிறைவேற்றிய திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து தானே பெரும்பாலான போராட்டங்கள் நடக்குது... அதனால, 1 லட்சம் போராட்டங்கள் நடந்திருப்பது என்பது, அரசின் சாதனை அல்ல; வேதனை என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இன்னும் ஒரு அணியாக வடிவம் பெறவில்லை; ஆளுக்கு ஒரு திசையில் சிதறி, உதிரிகளாக கிடக்கின்றன. ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும் நிலையில் இருக்கின்றன. தி.மு.க., தலைமையிலான அணி தான் கூட்டணி வடிவம் பெற்று, வலுவாக உள்ளது. அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து இருப்பதாக சொன்னாலும், அவர்களுக்குள் பிணைப்பு ஏற்படவில்லை.
டவுட் தனபாலு: என்ன தான் கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வுக்கு என்று தனித்தனி கொள்கைகள் இருக்குதே... உங்களை மாதிரி, தி.மு.க.,வின் சார்பு அணியாகவே, எதிர்க்கட்சி கூட்டணியும் செயல்படணும்னு சொல்றீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
பத்திரிகை செய்தி: திருத்தணி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்காக, அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன், திருவள்ளூர் நகர தி.மு.க., செயலர் ரவிச்சந்திரன் மனைவி செல்வி உட்பட ஐந்து பேர் கட்டணம் செலுத்தியிருந்தனர். தேர் இழுத்தபோது, 'முன்னாள் முதல்வர் பழனிசாமி, 2026ல் முதல்வர் ஆக வேண்டும்' என, அ.தி.மு.க.,வினர் கோஷம் எழுப்பினர். இதற்கு தி.மு.க.,வினர் மற்றும் சக பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'கோவிலில் அரசியல் செய்யக் கூடாது' என, தகராறு செய்தனர். போலீசார் சமரசம் செய்ததை அடுத்து தேர் இழுத்தனர்.
டவுட் தனபாலு: கோவிலில் அரசியல் செய்யக் கூடாது என்பதில், 'டவுட்'டே இல்லை... அதேநேரம், கோவில் அறங்காவலர்களா ஆளுங்கட்சியினரை நியமிப்பதையும் நிறுத்தணும்... கோவில் நிர்வாகத்தை, ஆன்மிகவாதிகள் கையில் ஒப்படைத்து விட்டு, நிர்வாகத்தில் இருந்து ஆளுங்கட்சியினர் வெளியேறினால், 'டவுட்'டே இல்லாம அரசை பாராட்டலாம்!