PUBLISHED ON : ஜூன் 01, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச் சரும், 'மாபா' நிறுவன உரிமையாளருமான பாண்டியராஜன்: தமிழகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், நாடார் சமுதாயத்திற்கு 36 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும். ஆனால், எந்த கட்சியும் அப்படி வழங்குவதில்லை. தொழில் வளத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடார் சமுதாயம் அரசியலில் பின்தங்கி உள்ளது. அதற்கு காரணம், தொழிலை மையமாக வைத்து யாரும் தேர்தலில் ஓட்டளிப்பதுஇல்லை. மேலும், ஒரு தொகுதியில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர் போட்டியிட்டாலும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவருக்கே ஓட்டளிக்கிறோம்.
டவுட் தனபாலு: 'சொந்த சமுதாயத்தினரே ஓட்டு போட மாட்டேங்கிறாங்க'ன்னு புலம்புறீங்களே... 2016 சட்டசபை தேர்தலில் நீங்க சென்னை, ஆவடி தொகுதியில் போட்டியிட்டப்ப, எல்லா வாக்காளர்களும் சமுதாயம் பார்த்து ஓட்டு போட்டிருந்தா, உங்களால ஜெயித்து, அமைச்சராகவும் ஆகியிருக்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பா.ம.க., எனும் அழகான ஆளுயரக் கண்ணாடியை, என் மகன் அன்புமணி ஒரு நொடியில் உடைத்து நொறுக்கி விட்டார். வளர்த்த கடாவே என் மார்பில் பாய்ந்துள்ளதால் நிலைகுலைந்து விட்டேன். கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து, பல தவறுகளை அன்புமணி செய்தார். ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் கட்சி பதவிக்கு வர தடையாக இருந்தார். இளைஞர் அணி தலைவர் பதவிக்கு முகுந்தன் நியமனம் பற்றி பேச்சு வந்தபோது, பெற்ற தாய் மீது பாட்டிலை துாக்கி வீசினார் அன்புமணி. மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார்.
டவுட் தனபாலு: இதெல்லாம் பல வருஷங்களா நடந்திருக்கு... அப்பவே, டாக்டர் பொங்கி எழுந்து மகன் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமே... எல்லாத்துக்கும் மவுன சாட்சியாக இருந்துட்டு, இப்ப புலம்புவது தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: தமிழக பெண்களுக்கு, 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதால், தமிழகத்தில் வறுமை ஒழிந்து விடவில்லை. இனி, தமிழகத்தில் ஒற்றைக்கட்சி ஆட்சி முறை இருக்கக்கூடாது; கூட்டணி ஆட்சி வரவேண்டும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்வது சரிதான்... அதனால, 'வர்ற சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி' என்று வெளிப்படையாக அறிவிச்சிடுங்க... அப்பதான் ரெண்டு திராவிட கட்சிகளும் வழிக்கு வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!