PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஏற்கனவே வீட்டு வாடகை, மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால், ஏழைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பஸ் கட்டணத்தை உயர்த்த, தி.மு.க., அரசு முடிவு செய்திருப்பது, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. தமிழக அரசு பஸ்களின் நிலை, மிக மோசமாக உள்ளது. இதை சரிசெய்யாமல், கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது.
டவுட் தனபாலு: பஸ் கட்டணத்தை உயர்த்திட்டு, அந்த பணத்துல பஸ்களை பராமரிக்கலாம்னு நினைச்சிருப்பாங்க... உங்களை போன்ற எதிர்க்கட்சி யினர் கண்டனம் தெரிவிப்பதால, அந்த திட்டத்தை கைவிட்டுடுவாங்க... பஸ்கள் இதைவிட பாடாவதியாகவே இயக்கப்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில் அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்து உள்ளது. நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், 70,000 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில், 40,000 பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள். இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் தி.மு.க., அரசு படுதோல்வி அடைந்து விட்டது. ஓட்டளித்த இளைஞர்களுக்கு துரோகம் செய்த முதல்வர் ஸ்டாலின் அரசுக்கு, வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
டவுட் தனபாலு: 'தமிழகத்தில், 3.50 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவோம்'னு, 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினர் வாக்குறுதி தந்திருந்தாங்க... அதுல பாதியை கூட நிரப்பாம இருந்துட்டு, 'எல்லாருக்கும் எல்லாம்'னு முதல்வர் அடிக்கடி எதை சொல்றார்னு தான், 'டவுட்'டா இருக்கு!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தான், தமிழகத்தில் பெரிய கட்சி. சட்டசபையில் மக்களுக்காக பேச எங்களுக்கான குரல் இல்லை. இந்த முறை உறுதியாக சட்டசபைக்கு செல்வோம். தி.மு.க.,வை எதிர்க்க யாருக்கும் சக்தி இல்லை என்பது போல் சொல்கின்றனர். ஆனால், நா.த.க., தனித்து நின்றே தி.மு.க.,வை தோற்கடிக்கும். அதனால், எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம்.
டவுட் தனபாலு: தனித்து நின்று தி.மு.க.,வை தோற்கடிக்கும் அளவுக்கு உங்க கட்சிக்கு சக்தி இருக்கு என்ற உங்க தன்னம்பிக்கையை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்... அதேநேரம், உங்க பேச்சை கேட்டு, வேட்பாளர்களாக நிற்க முன்வரும் உங்க தம்பிகள் பாவம் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!