PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி: தற்போதைய தமிழக அரசு, சமூக நீதி என்றால் என்ன என்று தெரியாமல் உள்ளது. சமூக நீதியில், நாம் பிஎச்.டி., முடித்துள்ளோம். நாட்டிலேயே சமூக நீதிக்கு எடுத்துக்காட்டாக, நம் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளார். அவரது சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகக் கொள்கைகளை பின்பற்றி அடுத்தகட்டத்திற்கு பா.ம.க., செல்ல வேண்டும்.
டவுட் தனபாலு: சமூக நீதிக்கு எடுத்துக்காட்டு உங்க தந்தை ராமதாஸ்னு சொல்றீங்க... ஊர், உலகத்துக்கு எல்லாம் சமூக நீதி பாடம் எடுத்த ராமதாஸ், கடைசியில பெற்ற மகனிடமே நீதி கேட்டு போராடிட்டு இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தி.மு.க., ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மாவட்ட வாரியாக செய்த பணிகளை தொகுக்கும் நடவடிக்கைகள் நடக்கின்றன. இவற்றை விளம்பர பதாகைகள், செய்திகளாக, துறை அதிகாரிகளால் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், தங்கள் துறைகளின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் சிரமப் படுகின்றனர். 'உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை' என, புலம்பு கின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... 'நாலு வருஷம் செய்ததைவிட, செய்யாதது தான் நிறைய இருக்கு'ன்னு எதிர்க்கட்சியினர் சொல்றாங்க.... அதிகாரிகள், செய்தவற்றை பட்டியல் எடுத்துட்டு இருக்கிற அதே நேரத்துல, தி.மு.க., அரசு வாக்குறுதி தந்தும், செய்யாம விட்ட திட்டங்களை பற்றி மக்கள் மனசுக்குள்ள அசை போட்டுட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தே.மு.தி.க.,வுடன் சுமுகமான உறவு உள்ளது; எங்கள் கூட்டணி தொடர்கிறது. ராஜ்யசபா தேர்தலில் அவர்களுக்கு சீட் அளிக்க முடியாதது குறித்து, தெளிவான விளக்கம் கொடுத்து விட்டோம். மற்றபடி, பத்திரிகையாளர்கள் எதையாவது கேட்டு கூட்டணியை உடைத்து விடலாம் என்று நினைக்காதீர்கள்; அது நடக்காது. என்னை பற்றி த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேநேரம், அது தொடர்பாக நடிகர் விஜய் என்னிடம் பேசவில்லை.
டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ள பா.ஜ.,வின் பலம் மட்டும் பத்தாது... மற்ற கட்சிகளின் தயவும் தேவைப்படும் என்பதை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க போல தெரியுது... அதனாலதான், எந்த கட்சியையும் பகைச்சுக்காம நாசுக்கா நழுவுறீங்க என்பதும், 'டவுட்'டே இல்லாம தெரியுது!