PUBLISHED ON : ஜூன் 30, 2025 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. ஆனால், பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியை கேட்ட உடனேயே, 'மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது' என்கிறார், முதல்வர் ஸ்டாலின். நான்காண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் சொத்து வரி, மின்சாரம், குடிநீர் கட்டணம், பால் விலை, தொழில் வரி, பதிவு கட்டணங் கள் எல்லாம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒருவர், களவாடுவது பற்றி புலம்புவது, 'சாத்தான் வேதம் ஓதுவது' போல தான் உள்ளது.
டவுட் தனபாலு: 'ரயில் கட்டண உயர்வு சரியில்லை'ன்னு சொல்றீங்களே... பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிப்பதால், மத்திய அரசிடம் பேசி, இந்த கட்டண உயர்வை ரத்து செய்தால், தமிழக மக்களிடம் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்குமே... ஆனா, உங்க கோரிக்கையை மத்திய அரசு ஏத்துக்குமா என்பது, 'டவுட்' தான்!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரையை விமர்சித்து, 'வீடியோ' வெளியானது குறித்து, நடிகர் விஜய் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்க வேண்டும். ஈ.வெ.ரா.,வை விமர்சித்த பிறகும் அமைதி காக்கும் விஜய், உண்மையிலேயே, ஈ.வெ.ரா.,வை உள்வாங்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
டவுட் தனபாலு: தன் படத்தை பார்த்தவங்க, தன்னை பார்க்க கூடுறவங்க எல்லாம் ஓட்டு போடுவாங்கன்னு நம்பி, அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய்... அவரிடம் போய், அண்ணாதுரையை உள்வாங்கினீங்களா, ஈ.வெ.ரா.,வை வெளிவாங்கினீங்களா என்றெல்லாம் கேட்பது சரியா என்ற, 'டவுட்' தான் வருது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: என், 60ம் ஆண்டு திருமண நாளுக்கு, மகன் அன்புமணி வராதது வருத்தம் தான். விரைவில், பா.ம.க., பொதுக்குழுவை கூட்டி கூட்டணி குறித்து முடிவு செய்வேன். மறைந்த கருணாநிதி, கடைசி வரை, தி.மு.க., தலைவராக இருந்தார். அப்போது, ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை; தன் தந்தைக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கவில்லை. அவர் போல என் மகன் இல்லையே?
டவுட் தனபாலு: கடைசி வரை கருணாநிதி தலைவராக இருந்தாலும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் ஸ்டாலின் ஆதரவாளர்களாக தான் பார்த்து பார்த்து நியமிக்கப்பட்டாங்க... ஆனா, உங்க கட்சியில ஒரு ஒன்றிய செயலர் நியமனத்துல கூட அன்புமணிக்கு நீங்க அதிகாரம் அளிக்காதது தான், இப்போதைய பிரச்னைகளுக்கு காரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!