PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

ராமதாஸ் அணியைச் சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள்: அன்புமணி தலைமையில், 15 ஆண்டுகளாக தேர்தலில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறோம். எனவே, 2026 சட்டசபை தேர்தலில், ராமதாஸ் வெற்றி கூட்டணி அமைப்பார். அன்புமணியுடன் மாவட்ட நிர்வாகிகள் இருந்தாலும், ஓட்டு போடும் பாட்டாளிகள் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். எனவே, ராமதாஸ் தியாகத்துடன் அன்புமணியை ஒப்பிட முடியாது. அன்புமணி ஆதரவாளர்களால், ராமதாசுடன் இருப்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: ராமதாஸ் அணியில் இருக்கும் யாரும், அன்புமணிக்கு எதிராக வாய் திறக்க மாட்டேங்கிறாங்க... 'ரெண்டு பேரும் மனம் விட்டு பேசணும்'னு தான் மூத்த தலைவரான ஜி.கே.மணியே சொல்றாரு... அன்புமணி மேல நேரடியாகவே குற்றம் சாட்டும் உங்களுக்கு பா.ம.க.,வில் சிறப்பான எதிர்காலம் அமையுமா என்பது, 'டவுட்' தான்!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: எப்போதும் இணைய மாட்டோம் என கூறிவிட்டு, பிரிந்து கிடந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த தேர்தலை பா.ஜ., சந்திக்கிறது. தமிழகத்தில் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என சொன்னவர்களை எல்லாம் ஒரே அணியில் திரட்டி பா.ஜ., தேர்தலை சந்திக்கிறது. காரணம், தி.மு.க.,வை பார்த்து எதிர்க்கட்சி கூட்டணி பயந்து விட்டது.
டவுட் தனபாலு: அவங்களாவதுஇடையில பிரிந்து, இப்ப ஒன்று கூடியிருக்காங்க... ஆனா, உங்க கூட்டணியை ஏழு வருஷமா முட்டையை கோழி அடை காக்கிற மாதிரி காத்துட்டு வர்றீங்களே... எதிர்க்கட்சி கூட்டணி மீது உங்களுக்கு பயம்னு சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களா என்ற, 'டவுட்' வருதே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றிக்காக உழைப்போம். செப்., 15ல் திருச்சியில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்போம் என சொல்லவில்லை. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எல்லா கட்சியினரும் ஆசைப்படுவது தான். அது குறித்தும்கூட எங்கள் நிர்வாகிகள் வலியுறுத்தவில்லை.
டவுட் தனபாலு: உங்க மகன் துரை தான், '10 - 12 சீட்'னு சொல்லிட்டு இருக்காரு... மூத்த அரசியல்வாதியான நீங்க, உங்க கட்சியின் தற்போதைய பலத்தை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறதால தான், கூடுதல் சீட்கள் விஷயத்தில் அடக்கி வாசிக்கிறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!