PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்னரே, தண்ணீர் திறக்கப்பட்டது. ஸ்டாலின் ஆட்சியில் தற்போது அணையில், 136 அடி தண்ணீர் வந்த உடனேயே, பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்றுகிறது கேரள அரசு. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் விவசாயிகள் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில், தி.மு.க., எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பதே நல்லது.
டவுட் தனபாலு: வாக்குறுதிகளை நிறைவேற்றாத விரக்தியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும், 'தி.மு.க., எதிர்க்கட்சியாகணும்'னு தான் சொல்றாங்க... இந்த வரிசையில் விவசாயிகளும் சேர்ந்துட்டாங்க... தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதெல்லாம் தி.மு.க.,வுக்கு எச்சரிக்கை மணி என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழக போலீசில், காவலர்களுக்கு வார விடுப்பு வழங்கும் முறையை கொண்டு வந்தோம். அதை, கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என, முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன். காவலர்களின் ஓய்வில்லாத பணியும், பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
டவுட் தனபாலு: திருப்புவனம்வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டதுக்கும், ஓய்வில்லாம போலீசார் வேலை பார்த்தது தான் காரணம்னு சொல்ல வர்றீங்களா... ஓய்வில்லாம வேலை பார்த்தா, அப்பாவி மக்களை அடிச்சே கொல்லலாம்னு ஏதாவது சட்டத்துல எழுதியிருக்கா என்ற, 'டவுட்' தான் வருது!
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின் போது தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டும், தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. தற்போது திருப்புவனம் வழக்கும் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. இது, மாநில அரசுக்கு தன் அதிகாரிகள் மீது நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்காக சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
டவுட் தனபாலு: மாநில போலீசார் விசாரணை நடத்தி, தாமதம் ஏற்பட்டால் தங்கள் மீது பழி விழுந்துடும்னு தானே, சி.பி.ஐ.,க்கு வழக்கை மாத்தியிருக்காங்க... சி.பி.ஐ.,யால வழக்கு தாமதமானா, மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி தப்பிச்சுக்கலாம்னு திட்டமிட்டே வழக்கை தள்ளி விட்டுட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!