PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

ம.தி.மு.க., அவை தலைவர் அர்ஜுன ராஜ்: ஒரு விஷயத்தை அனைவரும்
கூர்ந்து கவனிக்க வேண்டும். தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., கூட்டணி வைத்து
எதிர்கொண்ட 2019, 2021, 2024 சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில்,
தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. ஆனால், கூட்டணி வைக்காத 2011
சட்டசபை, 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி தோல்வியை
தழுவியிருக்கிறது. ஆக, தி.மு.க., கூட்டணிக்கு ம.தி.மு.க., எவ்வளவு
முக்கியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: வரலாற்றை
திரிக்கக் கூடாது... 2011 சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க., அணியில் பேரம்
படியாம, கடைசி நேரத்தில் தி.மு.க., அணியிலும் சேர முடியாம, அந்த தேர்தலையே
உங்க கட்சி புறக்கணிச்சிடுச்சு... நீங்க சொல்ற மூணு தேர்தல்லயும் தி.மு.க.,
அணியில் சேர்ந்து தான், ம.தி.மு.க., இன்றும் நிலைச்சிருக்கு என்பது தான்,
'டவுட்' இல்லாத உண்மை!
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி: தமிழகத்தில், 1.15 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. 45 லட்சம் பேர், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். இவ்வளவு செய்த தமிழக அரசை விமர்சிக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு உரிமையில்லை. 'எந்த தேர்தலிலும் ஒன்று சேர மாட்டோம்' என ஆர்ப்பரிப்போடு சொன்ன பழனிசாமி, பா.ஜ.,வோடு கைகோர்த்து கொண்டது ஏன்? அவர் சொன்னதை அவரே மீறலாமா?
டவுட் தனபாலு: 'அரசியல்ல நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை'ன்னு சொல்வாங்களே... 'கூடா நட்பு கேடாய் முடிந்தது'ன்னு சொல்லி, 2013ல் காங்., கூட்டணியை கருணாநிதி கைகழுவிட்டாரே... அப்புறமா, 2019ல் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்த நீங்க, எதிர்க்கட்சியை விமர்சிக்கலாமா என்ற, 'டவுட்' வருதே!
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: நாங்கள் கூட்டணி தர்மத்தை பின்பற்றுகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி படுக்கையில் இருந்தபோது, அவரை சந்தித்தேன். அவர், ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்குமாறு என்னை கேட்டுக் கொண்டார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் தான், தி.மு.க., கூட்டணியில் இன்று வரை இயங்கி வருகிறோம்.
டவுட் தனபாலு: உங்க முன்னாள் தலைவர் கருணாநிதியும் இப்படித்தான், 'மரண படுக்கையில் காயிதே மில்லத் என் கையை பிடிச்சு, சிறுபான்மை மக்களுக்கு நீங்க தான் பாதுகாவலரா இருக்கணும்னு கேட்டுக்கிட்டதா அடிக்கடி சொல்லுவாரு... நீங்களும் அதே மாதிரி சொல்லி, கருணாநிதியின் சீடர் என்பதை, 'டவுட்'டே இல்லாம நிரூபிச்சிட்டீங்க!