PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

எஸ்.டி.ஸ்ரீநிவாஸன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக திராவிட மாடல் அரசு, பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், தொகையை குறிக்கும், ₹ என்ற 'லோகோ'வை எடுத்து விட்டு, 'ரூ' என்ற இலச்சினையை அறிமுகப்படுத்தி உள்ளது.
காரணம், ₹ என்பது தேவநாகரி எழுத்தாம்; அதனால் நீக்கிவிட்டனராம். இதைச் சொன்ன தமிழக திட்டக் கமிஷன் தலைவரின் பெயர் என்ன தெரியுமா? ஜெயரஞ்சன்!
சமஸ்கிருதத்தை துாக்கி பிடிப்பதாக கூறப்படும் பிராமணர்கள் கூட இத்தகைய பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. சமஸ்கிருத பெயர் என்பதால், ஜெயரஞ்சனை நீக்கிவிடுவரா?
முதல்வரின் பெயர் என்ன துாய தமிழ் பெயரா? ஸ்டாலின் என்பதில் முதல் எழுத்தே, 'ஸ்' என்ற குத்தெழுத்து; அதுமட்டுமல்ல, அது ஒரு தேவநாகரி எழுத்து!
தமிழின் மீது கொண்ட பற்றால், சூரிய நாராயணன் என்ற தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக்கொண்டாரே... நாடகவியலுக்கு இலக்கணம் தந்த தமிழ் மேதை... அவரைப் போல், முதல்வர் தன் பெயரை தமிழில் மாற்றிக் கொண்டால் அல்லது தன் பெயரின் முதல் எழுத்தான, 'ஸ்' நீக்கி, 'ச்' என்று வைத்து, 'ச்டாலின்' அல்லது 'சுடாலின்' என்று தன் பெயரை தமிழ்படுத்திக் கொண்டால், அவரது தமிழ் ஆர்வத்தை பாராட்டலாம்!
அதேபோன்று, சமஸ்கிருதப் பெயர்களான துர்கா, உதயநிதி, கட்சி சின்னத்தின் பெயரான உதயசூரியன் போன்றவற்றையும் மாற்றி, தனித் தமிழில் பெயர் வைத்து, தன் தமிழ் பற்றை முதல்வர் காட்டலாமே!
செய்வாரா?
கடிவாளத்தை இறுக்க வேண்டும்!
டி.ஈஸ்வரன்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,
பொதுச்செயலர் பழனிசாமி, சமீபத்தில் காணொளிக்காட்சி வாயிலாக கட்சி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, 'கூட்டணி குறித்து நிர்வாகிகள் கருத்து
தெரிவிக்கக் கூடாது; உட்கட்சி பிரச்னைகளை பொதுவெளியில் பேசக்கூடாது.
தி.மு.க., வினருடன் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுபோன்று அவர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தபடி தான் இருக்கிறார்; கட்சியினர்தான் கேட்பதாக தெரியவில்லை.
சமீபத்தில்,
அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல்சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசும்போது,
'அந்த அம்மா இருந்தப்ப, திருமண நிகழ்ச்சிகளில் தி.மு.க.,வினரை பார்த்தோம்
என்று தெரிந்தாலே கட்சியை விட்டு நீக்கி விடுவார்.
'இப்போது
பாருங்கள்... ஜாலியாக அவர்களுடன் கைகுலுக்கி, சந்தோஷமாகபேசிக்
கொண்டிருக்கிறோம்' என்று ஜெயலலிதாவையே கிண்டல் செய்து பேசினார். அவர் மீது
என்ன நடவடிக்கை எடுத்தார் பழனிசாமி?
கட்சி போஸ்டர்களில் யார் யார்
புகைப்படத்தை எந்த அளவு போட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டார்,
பழனிசாமி. ஆனால், மாவட்ட செயலர்கள் படம் பெரிய அளவில் போடப்பட்டு, அவர்களை
'இந்திரனே, சந்திரனே' என்பதுபோல் புகழ்ந்து பிரமாண்ட போஸ்டர்கள்
ஒட்டுகின்றனர்.
இந்தக் கூத்தெல்லாம் ஜெயலலிதா இருக்கும்போது
நடந்ததா? படம் அல்ல... பெயர் கொஞ்சம் பெரிதாகி விட்டாலே அந்த போஸ்டர்களை
ஒட்ட மாட்டார்கள்; அந்த பயம் எங்கே போனது?
கடந்த 1984, ஜனவரி 25ல்
கட்சி சார்பில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், தான் அறிவித்த
விருத்தாச்சலம் கூட்டத்தில் பேசாமல், மதுரையில் போய் பேசியதற்காக, அப்போதைய
கொள்கைபரப்பு செயலர்ஜெயலலிதா, வருவாய்த்துறை அமைச்சர் சோமசுந்தரத்திற்கு
நோட்டீஸ் அனுப்பினார்.
'என் கவனத்திற்கு கொண்டு வராமல், நீ எப்படி
நடவடிக்கை எடுக்கலாம்' என்று ஜெயலலிதா மீது, எம்.ஜி.ஆர்., கோபம் கொண்டது
அறியாமல், 'எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் நடந்திருக்காது' என்று எண்ணி,
எம்.ஜி.ஆரை பொதுவெளியில் விமர்சனம் செய்தார், சோமசுந்தரம்.
'கட்சி
விஷயங்களை பொதுவெளியில் பேச வேண்டாம்; நேரில் வாருங்கள் பேசித் தீர்த்துக்
கொள்ளலாம்' என்று எம்.ஜி.ஆர்., அழைத்தும் சோமசுந்தரம் கேட்கவில்லை.
அதனால்,
அவரையும்,அவருக்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.,க்களையும்
கட்சியில் இருந்து நீக்கினார். கூடவே, ஜெயலலிதாவையும், கொள்கை பரப்பு
செயலர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்.
ஓர் ஆண்டுக்கு வெறும் உறுப்பினராக மட்டுமே இருந்தார், ஜெயலலிதா.
கட்சிக்
கட்டுப்பாட்டை மீறினால் என்ன நடக்கும் என்பதற்கு ஜெயலலிதாவிற்கு,
எம்.ஜி.ஆர்., கொடுத்த தண்டனை இது! அவரது மறைவிற்குப் பின், ஜெயலலிதா
அ.தி.மு.க.,வினரை எப்படி கட்டுப்படுத்தி வைத்திருந்தார் என்பதை நாடே
அறியும்!
ஒருசமயம், மூத்த அமைச்சர் ஒருவர் சென்னையில் பிறந்த நாள் விழா கொண்டாடினார். அவரை வாழ்த்துவதற்கு இன்னொரு அமைச்சர் சென்றார்.
இத்தகவல்
ஜெயலலிதாவுக்கு செல்ல, அடுத்த சில மணிநேரத்தில், பிறந்த நாள் வாழ்த்து
சொல்ல சென்ற அமைச்சர், பதவியை இழந்தார்; அவர் வகித்து வந்த கட்சிப்
பதவியும் பறிக்கப்பட்டது.
அன்று முதல், அ.தி.மு.க.,வினர் தங்கள் வாழ்க்கையில் பிறந்த நாட்களை மறந்தே போய்விட்டனர்.
அந்த
பயமும், கட்டுப்பாடும் மீண்டும் அ.தி.மு.க.,வினரிடம் வருவதற்கு
வாய்ப்பில்லை; என்னதான் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாலும், கட்சி நிர்வாகி
களுக்கு எறும்பு கடிப்பது போல்தான் அது உள்ளது என்பதே நிதர்சனம்!
பகல் கனவு காணலாமா?
என்.தொல்காப்பியன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேசிய ஜனநாயக
கூட்டணியின் ஆதரவோடு மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை
அமைப்போம்'என்று, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் சபதம் செய்து உள்ளார்.
இதைக் கேட்கும்போது வாய்விட்டு சிரிக்கத் தான் தோன்றுகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி என்பது முடிந்தபோன கதை என்பது தான் நிதர்சனமான உண்மை!
அ.தி.மு.க., கட்சி பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை எப்படி அமைக்க முடியும்?
தினகரனின் அ.ம.மு.க., கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.
நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் ஓட்டு வங்கி கூட தினகரன் கட்சிக்கு இருக்குமா என்பது சந்தேகமே!
பா.ஜ.,வும் தமிழகத்தில் இன்னும் வளர வேண்டிய நிலையில் தான் இருக்கிறது!
அப்படியே பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும் அது, மோடி ஆட்சியாகத் தான் இருக்குமே தவிர, ஜெயலலிதா ஆட்சியாக எப்படி இருக்கும்?
தி.மு.க.,
கூட்டணியில்அவ்வப்போது சிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும், அது தேர்தலில்
பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா, இல்லையா என்பது போகப் போகத் தான்
தெரியும்.
எனவே, 'மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை ஏற்படுத்துவோம்' என்ற தினகரனின் கனவு, வெறும் பகல் கனவே!