PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம் தலைமையில் நடந்தது. தி.மு.க., துணை பொதுச்செயலரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கனிமொழி பேசும்போது, '2026 சட்டசபை தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும்; எந்த முறையில் பணிகளை துவக்க வேண்டும் என, பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் களப்பணியை இன்றிலிருந்தே துவங்க வேண்டும்.
'சட்டசபை தேர்தலில் பெறும் வெற்றி மூலம் எதிராளிகளுக்கு நாம் யார் என்பதை காட்டுவோம். ஒவ்வொருவரும் திட்டமிட்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். 200 தொகுதிகளில் வென்று காட்டி வரலாறு படைப்போம்...' என்றார்.
கூட்டம் முடிந்ததும், நிர்வாகி ஒருவர், 'நாம என்ன தான் மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தாலும், கடைசிநேர பட்டுவாடா தான் பா கைகொடுக்கும்...' என கூற, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.