PUBLISHED ON : ஜூலை 01, 2025 12:00 AM

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழக அரசு, விபத்தில்லா
சாலை பயணத்தை உறுதி செய்ய முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாகனத்தை இயக்குவதற்கும், போக்குவரத்திற்கும் சரியான சாலை வசதிகளை
ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்து விதிகளில் சமரசம்
செய்யாமல், லஞ்சத்திற்கு இடம் இல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும்
கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வாசன் தலைமையில் கூட தமிழகத்தில் ஆட்சி அமைச்சுடலாம்... போக்குவரத்து துறையில் லஞ்சத்தை மட்டும் ஒழிக்கவே முடியாது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: முருக பக்தர்கள் மாநாட்டில் இடம் பெற்றதாக சொல்லப்படும் அண்ணா துரை, ஈ.வெ.ரா., குறித்த படக்காட்சியை குறிப்பிட்டு, 'எங்கள் கட்சி தலைவர்களை விமர்சித்திருந்தால், கூட்டணியை விட்டு வெளியேறி இருப்போம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் குறித்து, தி.மு.க., தலைவர்களின் வசை பேச்சுகளை நினைவில் கொண்டிருந்தால், தி.மு.க., வோடு காங்., கூட்டணி அமைத்திருக்கவே முடியாது என்பதை செல்வப் பெருந்தகை மறந்து விட்டார் போலும்.
இந்திரா, ராஜிவ் எல்லாம் காலமாகி பல வருஷமாகிடுச்சு... சில வருஷத்துக்கு முன்னாடி வைகோ பேசிய பேச்சுக்கு, அவர் கூட தி.மு.க., கூட்டணி சேர்ந்திருக்கலாமா?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கடந்த 2023ல், 'ஷி டாய்லெட்' என்ற திட்டத்தை சென்னை மேயர் பிரியா துவக்கி வைத்தபோது, உலக மகா புரட்சி செய்து விட்டதை போல் தி.மு.க.,வினர் குதித்தனர். இன்று சென்னையில் எந்த பெண்ணுக்கும், அந்த திட்டம் இருப்பதே தெரியாது. ஒரு மினி பஸ்சில் கழிப்பறை வசதி மற்றும் 'சானிடரி நாப்கின்' வழங்கும் இயந்திரத்தை கொண்டது தான், 'ஷி டாய்லெட்' திட்டம். இத்திட்டத்திற்கு 4.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்று அப்படி ஒரு மினி பஸ்சை கண்ணால் கூட காண முடியவில்லை.
அந்த 4.50 கோடி பணம் எங்கு போச்சுன்னும் தெரியலையே!
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேச்சு: தமிழ் கடவுள் முருகன், தமிழின் அடையாளமாகவும், கலாசாரமாகவும், பக்தியின் பாசமாகவும் திகழ்கிறார். ஆனால், பா.ஜ.,வினர், முருகனை ஓட்டு வங்கியாக மாற்றி விட்டனர். ருத்ராட்சம் கட்டி பள்ளிக்கு அனுப்ப சொல்லும் அரசியல், குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை சீரழிக்கும் சதி. பாரதியார் மட்டும் இருந்திருந்தால், பா.ஜ.,வின் கல்விக் கொள்கையை எதிர்த்திருப்பார்.
அதே பாரதியார் இருந்திருந்தால், இவங்களது போலி மதச்சார்பின்மையையும் கண்டிச்சிருப்பாரு!