PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

தி.மு.க., ஆதரவு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு: தி.மு.க.,
ஆட்சியை அகற்றி விடுவோம் என்கின்றனர் பா.ஜ.,வினர். அது என்ன பிள்ளை
விளையாட்டா. மணல் வீடு கட்டி கலைக்கிற மாதிரியா. கருவை கலைத்த மாதிரி,
ஆட்சியை கலைத்து விடலாம் என நினைக்கிறீர்களா? உங்கள் கட்சியில் இருக்கிற
பாதி பேர், வழிப்பறி கொள்ளையர்கள். பா.ஜ., என்பது சமூக விரோதிகளின்
கூடாரம்.
போதைப் பொருட்களை கடத்திய ஜாபர் சாதிக், தி.மு.க.,வில்
தானே முக்கிய பொறுப்பில் இருந்தாரு... அவர் சுதந்திர போராட்ட தியாகின்னு
சொல்றாரோ?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: இந்திய அரசமைப்பு சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோஷலிசம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து, தவிடு பொடி ஆக்கும் வகையில், மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.
இவர் சொல்றது எல்லாம் நடந்திருந்தால், இன்று இந்தியா என்ற நாடே இருந்திருக்காதே!
தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி: இந்தியாவின் வளர்ச்சி என்பது இயல்பாகவே இருப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால், அந்த வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி என்பதை பார்க்கிறபோது, பிரதமர் மோடி ஆட்சி குறிப்பிட்ட சில தொழிலதிபர்களான அதானி, அம்பானி ஆகியோர் சொத்துகளை குவிக்க மட்டும் தான் பயன்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு பயன்படவில்லை. பா.ஜ., ஆட்சி என்பது கார்ப்பரேட்களுக்கான ஆட்சியே தவிர, 146 கோடி மக்களுக்கான ஆட்சி அல்ல.
அம்பானியும், அதானியும் இந்த, 10 வருஷத்துல மட்டும் தான் தொழில் துவங்கி வளர்ந்தாங்களா... அவங்க எல்லாம், காங்., ஆட்சியில் தானே தொழிலதிபர்களா உருவெடுத்தாங்க!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் மது அருந்திய கும்பலை தட்டிக்கேட்ட, அரசு பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதை கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தி.மு.க., அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு சென்றிருக்கிறது.
பள்ளிக்கூடங்களையே பாராக மாற்றும் அவலம், தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்!