PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை குறைவாக விமர்சனம் செய்த தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் மீது, அடக்குமுறையை தமிழக போலீஸ் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழக போலீஸ், தி.மு.க.,வின் ஏவல் துறையாக மாறிவிட்டது. பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மீது தாக்குதல்
நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாராயணன் திருப்பதியை தாக்கிய போலீசாரை கண்டித்து, பா.ஜ., தலைவர்களிடம் இருந்து எந்த கண்டன அறிக்கையும் வந்த மாதிரி தெரியலையே!
பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேட்டி: 'எங்கள் நோக்கம், முதல்வர் பதவி கிடையாது; பிரதமர் பதவி தான்' என்கிறார் திருமாவளவன். முதல்வர் ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி கேட்க, அவருக்கு தைரியம் உள்ளதா? திருமாவளவன் ஏதோ வெட்டியாக பேசுகிறார்; வேங்கைவயல் விவகாரத்தில் இன்று வரை மவுனமாக உள்ளார்.
துணை முதல்வர் பதவியை விடுங்க... ஒரு அமைச்சர் பதவியை கூட, முதல்வரிடம் திருமாவால கேட்டு வாங்க முடியாதுன்னு, இவருக்கு தெரியாதா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: அம்பேத்கர் அரசியலை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே ஆட்சி, அதிகாரம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும். அதிகாரத்தை வெறும் பதவியாக பார்ப்போர், முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளை அடைவதற்கு, என்னென்ன குறுக்கு வழி இருக்கிறதோ, அதை பற்றி சிந்திப்பர்.
பிரதமர் பதவி இருக்கட்டும்... தமிழகத்துல முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகளை அடைய, தி.மு.க.,வினர் குறுக்கு வழியை கையாள்றாங்கன்னு குற்றஞ்சாட்டுறாரா?
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேச்சு: செப்., 15ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை ஒட்டி, திருச்சியில் நடக்க உள்ள மாநாட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம். குறைந்தபட்சம் 4 லட்சம் பேர் திரள்வர். திருச்சி மாநாடு, தமிழக
அரசியல் களத்தில் நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். மாநாட்டுக்கு பின், கட்சிக்கு மிகப்பெரிய எதிர்காலம் வரும்.மாநாட்டுக்கு 4 லட்சம் பேரை திரட்டணும்னா, எத்தனை கோடிகளை செலவு செய்யணும் தெரியுமா...? அந்த அளவுக்கு செல்வாக்கான நிர்வாகிகள் இவரது கட்சியில இருக்காங்களா என்ன?