PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சிவா பேட்டி: அனைத்து மாநிலங்களிலும்
ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் இருக்கும்போது, தமிழகத்தில் உரிமை
பெற்றவர்களாக இருக்கின்றனர். வரும் 2026ம் ஆண்டு தேர்தல் ஒரு தத்துவ போர்;
திராவிடம் வேரூன்றிய மண்ணில், அதன் கொள்கைக்கு மாறுபட்டவர்கள் துரோகிகள்
உதவியுடன் வருகின்றனர். ஆனாலும், மீண்டும் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.,
அரசு அமையும்.
பெண்களுக்கு உரிமைகள் தந்திருப்பதாக சொல்றாரே... 2026ல் தி.மு.க., வெற்றி பெற்றால், ஒரு பெண்ணை முதல்வராக்குவாங்களா?
புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி: பா.ம.க., பிரச்னைக்கும், அமித் ஷாவிற்கும் சம்பந்தம் உள்ளது என்கின்றனர். அதில் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க.,வினரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பார்த்து எந்த அளவிற்கு பயந்து போய் இருக்கின்றனர் என்பது தெரிகிறது.
அமித் ஷாவை பார்த்து தி.மு.க., வினர் பயப்படுறாங்களோ இல்லையோ... 'கூட்டணி ஆட்சி' என்ற அவரது கோஷத்தால், அ.தி.மு.க.,வினர் தான் அச்சத்துல இருக்காங்க!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: 'கொள்கை வேறு, கூட்டணி வேறு' என்று தினகரன் மட்டுமல்ல, பல தலைவர்களும் சொல்கின்றனர். கொள்கை இல்லை என்றால் எதற்காக கூட்டணி. கெஜ்ரிவால், மம்தா எந்த கூட்டணி வைத்து வென்றனர். மக்களை நம்பாதவர்களுக்கு தான் கூட்டணி. கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்தால் அது நியாயம் என்று நினைக்கின்றனர். என்னை சந்திக்கும் மக்கள், 'யாருடனும் கூட்டணி வைக்காதே' என்கின்றனர்.
கொள்கைகள் ஒன்றாக இருக்கும் கட்சிகள் தான் கூட்டணி சேரணும் என்றால், இந்தியாவில் எந்த கூட்டணியும் இருக்காது!
பா.ம.க., தலைவர் அன்புமணிஅறிக்கை: தமிழகத்தில்கடைகள், தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3,500 கோடி ரூபாய் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க., அரசு, வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு, 374 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நாடகம் நடத்துகிறது. சட்டசபை தேர்தல் வருவதால் தான், வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தாமல் விட்டுள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். அந்த சுமை அப்பாவி மக்களின் தலையில் தான் விழும்.
இதை எல்லாம் தி.மு.க., அரசு யோசிக்காமலா இருக்கும்...? தேர்தல் நேரத்தில், 'பட்டுவாடா' பலன் அளிக்கும்னு நம்புறாங்களோ?