/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
2,000 கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை பயிற்சி அளித்துள்ளேன்!-
/
2,000 கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை பயிற்சி அளித்துள்ளேன்!-
2,000 கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை பயிற்சி அளித்துள்ளேன்!-
2,000 கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை பயிற்சி அளித்துள்ளேன்!-
PUBLISHED ON : மார் 26, 2025 12:00 AM

எளிய மூலிகை மருத்துவ ஆலோசனைகள் வாயிலாக, லட்சக்கணக்கான கால்நடைகளை பலவித நோய்களில் இருந்து காப்பாற்றியுள்ள கால்நடை மூலிகை மருத்துவ நிபுணரான, முனைவர் புண்ணியமூர்த்தி:
தஞ்சாவூர், வல்லம் தான் எங்களின் பூர்வீகம்; விவசாயக் குடும்பம். சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில் பட்டப்படிப்பு, முனைவர் ஆய்வு படிப்பு முடித்துவிட்டு, பல இடங்களில் வேலை பார்த்தேன்.
மத்திய அரசின் வேளாண் மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தில் கால்நடை மருத்துவம் தொடர்பான தகவல் சேகரிப்புக்காக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு 1997ல் சென்றேன்.
அவர்கள் கண்டுபிடித்த மருந்துகளும், அவர்களின் ஆய்வுகளும் நம் நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்புக்கு பயனுள்ளதாக இல்லை என்று தோன்றியது.
அப்போதுதான், நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டது. பல சித்த மருத்துவர்களை சந்தித்து, மூலிகை மருத்துவம் தொடர்பான தகவல்களை சேகரித்தேன்.
அந்த மருத்துவ முறைகளை அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தி, முதற்கட்டமாக எங்கள் வீட்டு மாடுகளுக்கு பயன்படுத்தி பார்த்தேன். அது மிகவும் நல்ல பலனை கொடுக்கவே, அதை கால்நடை வளர்ப்பாளர்களிடம் தெரிவித்தேன்.
தமிழக அரசு கடந்த 2007ல் வழங்கிய, 18 லட்சம் ரூபாய் நிதியுதவியில், தஞ்சையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், மரபுசார் மூலிகை மருத்துவ மையத்தை ஆரம்பித்தேன்.
இது தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், 2010ல் 80 லட்சம் ரூபாயும், தமிழக அரசு, 2016ல் 13.72 கோடி ரூபாயும் நிதியுதவி வழங்கின.
தேசிய பால்வள நிறுவனம் செயல்படுத்தி வரும் கால்நடை மூலிகை மருத்துவ திட்டத்தின் கீழ் குஜராத், பஞ்சாப், மத்திய பிரதேசம், உ.பி., மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான கால்நடை மருத்துவர்களுக்கு, மூலிகை மருத்துவ பயிற்சி அளித்துள்ளேன்.
இந்த மருத்துவம் தொடர்பாக டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆய்வறிக்கை சமர்ப்பித்து, பல விருதுகளும் வாங்கியுள்ளேன்.
என் பணி ஓய்வுக்குப் பின்னும் கூட, ஏராளமான விவசாயிகள் என்னை தொடர்பு கொண்டு, கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்கின்றனர். நம் முன்னோர் சொல்லிவிட்டு சென்ற மூலிகை மருத்துவ முறைகளை பகிர்ந்து வருகிறேன்.
தொடர்புக்கு:
98424 55833.