/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இன்றைய தினத்தை மட்டும் மனதில் வைத்து வாழ்கிறேன்!
/
இன்றைய தினத்தை மட்டும் மனதில் வைத்து வாழ்கிறேன்!
PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் 'கலக்கும்' பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்:
பயணம் என்பது இலக்கை அடைவது மட்டுமல்ல, பயணம் என்பது நாம் தீர்மானிப்பது. உங்கள் அலுவலகத்துக்கு செல்வதையே நல்ல பயண அனுபவமாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும், புதுப்புது பாதைகளில் உங்கள் அலுவலகத்திற்கு செல்லுங்கள்.
முடிந்தால் ஒருநாள் பைக், ஒருநாள் சைக்கிள், ஒருநாள் பஸ், ஒருநாள் ரயில் என மாற்றிப் பாருங்கள். மக்களோடு மக்களாக செல்லும்போது இன்னும் சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைக்கும். நான் எல்லா பயணத்தையுமே அப்படித்தான் ஆக்கிக் கொள்கிறேன்.
என்னால் சும்மா கண்களை மூடியபடி, தனிமையில் பயணம் செய்ய முடியாது. சென்னையில் இருந்து மாணவர்கள் பலர் அடிக்கடி கல்லுாரி விழாக்களுக்கு என்னை அழைக்கின்றனர். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் தனியாக ஊர் சுற்றுவேன். இம்முறை நான் சாலையோரக் கடையில் தோசை சுட்டு, நண்பர் எடுத்த வீடியோ வேகமாக பரவியது.
நான் எப்போதுமே அப்படித்தான். கேமராவுக்கு பின்னால் ஒரு அழகான வாழ்க்கையை வாழ்கிறேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் விஜயகாந்த் சார் தான்... கள்ளழகர் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தேன். அவர், கடவுளின் குழந்தை.
மிகவும் கடுமையான டயட்டை பாலோ செய்கிறேன். அசைவ உணவு பிடிக்கும். ஆனால், 50 வயதை தாண்டி விட்டதால், சைவத்திற்கு மாறி விட்டேன். என் வீட்டில் விதவிதமான அசைவ உணவுகளை அனைவரும் சாப்பிடுவர்.
நான் மிக கட்டுப்பாடுடன் சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்யத் தேவையான கலோரிக்கு மட்டும் சாப்பிடுவேன். 1 அவுன்ஸ் கூடி விட்டாலும், அதை உடற்பயிற்சி செய்து ஈடுகட்டுவேன்.
ஆரோக்கியமான உணவு, மகிழ்ச்சியான மனநிலை, நல்ல துாக்கம் இந்த மூன்றும்தான், உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும்.
என் சகோதரி மாளவிகா சூட், காங்கிரசில் சேர்ந்து அரசியலுக்கு வந்தபோது, பின்னணியில் நான் இருப்பதாக பலரும் பேசினர்.
நான் சுதந்திரமான ஆள். மனதில் நினைப்பதை செய்ய வேண்டும் என நினைப்பவன். கட்டுப்பாட்டோடு என்னால் யார் கீழும் இருக்க முடியாது.
அரசியல் எனக்கு அலர்ஜியெல்லாம் கிடையாது. அரசியல் எனக்கு கடினம். உதவிகள் செய்ய அரசியல்வாதியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?
நான் சம்பாதிப்பதில், என்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்கிறேன். அது மனநிறைவைத் தருகிறது. நாளை என் மனநிலை மாறலாம். எந்த திட்டமிடலும் இல்லாமல், இன்றைய தினத்தை மட்டுமே மனதில் வைத்து வாழ்கிறேன். அவ்வளவுதான்!