/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த வேலை கிடைத்தது நான் செய்த புண்ணியம்!
/
இந்த வேலை கிடைத்தது நான் செய்த புண்ணியம்!
PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

கர்நாடக மாநிலம், பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில், குட்டி மிருகங்களை பராமரிக்கும் சாவித்திரியம்மா:
பிரசவத்தின்போது தாய் விலங்கு இறக்கும்போதும், இரை தேட போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதத்தாலும் இளம் குட்டிகள், தாய் விலங்கை பிரிந்துவிட நேரிடும். அப்படிபட்ட ஆதரவற்ற குட்டிகளை வனத்துறையினர் மீட்டு, வன உயிரியல் பூங்காக்களில் ஒப்படைப்பர்.
அப்படிபட்ட குட்டிகளை கண்ணும் கருத்துமாக கவனிக்கும் வேலையைத் தான் செய்து வருகிறேன். புட்டியில் பாலுாட்டி, குளிப்பாட்டி, கொஞ்சி, வேடிக்கைகள் காட்டி, அவ்வப்போது பாட்டு பாடி, அன்புடன் அணைத்து, அவை வாழுமிடத்தை துாய்மையாக பராமரிப்பது தான் என் வேலை.
கடந்த 2002ல் கணவரின் மறைவுக்கு பின், கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்தது. முதலில் வன விலங்குகளின் கூண்டுகளை துாய்மை செய்யும் பணிக்கு சேர்ந்தேன். ஆனால், நான் வன விலங்குகளுடன் வெகு இயல்பாகவும், அன்புடனும் பழகுவதை பார்த்த உயரதிகாரிகள், என்னை வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்தனர்.
நான் கூண்டுக்குள் நுழைந்ததுமே, விலங்குகள் என் கால்களை சுற்றி சுற்றி வரும்; செல்லமாக சிணுங்கும்; அரவணைப்பிற்கு ஏங்கும். என் முக்கிய வேலையே வன விலங்குகளுக்கு உணவளிப்பது தான். உணவு அளித்து, அவற்றுக்கு இதமாக மசாஜ் செய்து விடுவேன்; வருடி கொடுப்பேன்; பேச்சு கொடுப்பேன். அவை கண்களை மூடி சொக்கி போய் துாங்கும் வரை உடனிருந்து பார்த்துக் கொள்வேன்.
குட்டிகளுக்கு ஆறு மாதம் ஆகும் வரையிலான காலகட்டம் தான் முக்கியமானது. அவற்றை கையாளுவதிலும், 'எக்ஸ்பர்ட்' நான் தான். அதன்பின், குட்டிகள் சபாரி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு விடும். அங்கே அவற்றை பராமரிக்கும் பொறுப்பு, சபாரி பணியாளர்களை சேர்ந்தது.
குட்டிகளை பிரியும் தினத்தன்று அழுது விடுவேன். சில சமயங்களில் அந்த பக்கம் போகாமல் கூட இருந்து விடுவேன். ஏராளமான இளம் குட்டிகளை வளர்த்திருக்கிறேன். இங்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் மற்றும் வளர்ப்பு முறை காரணமாக, பாதிக்கப்பட்ட குட்டிகள் பலவும் இங்கு மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.
முழு அர்ப்பணிப்புடனும், மகிழ்ச்சியுடனும், மனநிறைவோடும் என் பணியில் ஈடுபட்டு வருகிறேன். சொந்த குழந்தைகளை போல் வளர்த்து ஆளாக்கும் மகிழ்ச்சியை தினமும் அனுபவித்து வருகிறேன். இந்த வேலை எனக்கு கிடைத்தது, நான் செய்த புண்ணியம்.
கடைசி நேரத்தில் கலைக்கான 'யூனிபார்மில்' இருக்கணும்!
கடந்த 55 ஆண்டுகளாக, வீதி நாடகம் மற்றும் கிராமிய பாடல் சார்ந்து இயங்கி வரும், மதுரையைச் சேர்ந்த மைக்கேல் அம்மாள்:
என் சொந்த ஊர், விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் கிராமம். அப்பா வில்லிசை கலைஞர். அவருடன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவேன். கோவிலில் நடக்கும் நாடகங்களுக்கு ஆள் தேவைப்படுகிறது என்று கூறி, என்னையும் சேர்த்துக் கொண்டனர். இப்படித்தான் என் கலைப்பயணம் ஆரம்பித்தது.
பொதுவாக பங்குனி, சித்திரை, ஆடி, புரட்டாசி மாதங்களில், தென் மாவட்டங்களில் கோவில் கொடை, பொங்கல், ஊர் திருவிழா, முளைப்பாரி நிகழ்ச்சிகள் இருக்கும். இந்த மாதங்களில் தான் எனக்கு பிரதான வருமானம். திருவிழா இல்லாத மாதங்களில், தெருக்கூத்து மற்றும் வீதி நாடகங்களுக்கு செல்வேன். என் 15வது வயதில், 'மேக்கப்' போட ஆரம்பித்தேன். போதும், போதாமை என்று தான் வாழ்க்கை நகரும். ஆனாலும், 'நல்லா நடிச்சீங்க, நல்லா பாடுனீங்க' என்று மக்கள் கூறும் அந்த வார்த்தைகளுக்காக தான் இத்தனை ஓட்டமும்!
என் கணவர் கூலி தொழிலாளி. 'இரவு முழுக்க எங்கு சென்று வருகிறாள்' என்று எவராவது தவறாக பேசினால், எனக்கு ஆதரவாகத் தான் பேசுவார். இரு பெண் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து விட்டேன். வயதான காலத்தில் என் கணவருக்கு குடிப்பழக்கம்
அதிகமானது.
அதனால், சிறிது நாட்கள் விலகி இருந்தால், கணவர் திருந்தி விடுவார் என்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டேன். ஆயிரம் சண்டைகள் இருந்தாலும், என் வருமானத்தில் தான் அவரை பார்த்துக் கொள்கிறேன்.
'எங்க வீட்டில் வந்து இருங்க' என்று மகள்கள் என்னிடம் கூறினாலும், அவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை.கலைக் குழுக்களுடன் சேர்ந்து வேலை செய்கிறேன். அரசிடம் இருந்தும், ஊர் மக்களிடம் இருந்தும் கலைக் குழுக்களுக்கு அழைப்பு வரும். சாப்பாடு, 'யூனிபார்ம்' மற்றும் போக்குவரத்து செலவுக்கு ரூபாய் கொடுத்து விடுவர்.
நிகழ்ச்சி முடித்து வரும்போது, யூனிபார்மை கலைக் குழுவில் கொடுத்துவிட்டு வரவேண்டும். இத்தனை ஆண்டுகளில் எனக்கென ஒரு செட் யூனிபார்ம் கூட சொந்தமாக தைத்தது இல்லை. பலருக்கும் கிராமிய பாடல்களை இலவசமாக சொல்லிக் கொடுத்து வருகிறேன். உடம்புக்கு வயதாகி விட்டது; ஆனால், எனக்குள் இருக்கும் கலை இன்னும் இளமையாகவே இருக்கிறது. இறைவனிடம் இருந்து அழைப்பு வரும்போது, கலைக்கான யூனிபார்ம் போட்டிருக்கணும் என்பதுதான் என் ஒரே ஆசை.