PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

'ஞானாலயா' என்ற பெயரில் நுாலகம் நடத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தை சேர்ந்த, டோரத்தி - கிருஷ்ணமூர்த்தி தம்பதி: கிருஷ்ணமூர்த்தி: எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவாலக்குடி. மணச்சநல்லுார் போர்டு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிந்தேன்.
ம.பொ.சி., அண்ணா துரை, ஜீவானந்தம் போன்ற பலரின் மேடை பேச்சுகளை ஆர்வமாகக் கேட்பேன்.
படிக்கும் காலத்திலேயே புத்தகங்களை சேமித்து, வீட்டில் சிறிய அளவில் நுாலகம் அமைத்தேன். பி.எஸ்சி., தாவரவியல் பட்டதாரியான டோரத்தி, எங்கள் பள்ளியில் ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
முதல் பார்வையிலேயே எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. டோரத்தி, எம்.எஸ்சி., முடித்தவுடன் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இருவருக்கும் பணி மாறுதல் கிடைத்தது. இங்கேயே செட்டிலானதுடன், வீட்டில் அருகில் தனி கட்டடம் கட்டி, 'ஞானாலயா' என்ற பெயரில் நுாலகத்தை ஆரம்பித்தோம். தற்போது, இந்த நுாலகத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் வைத்துள்ளோம்.
டோரத்தி: முதுமையில் வரும் மறதிக்கான தீர்வுகளில் ஒன்றாக, மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள சொல்கின்றனர் மருத்துவர்கள். அந்த வகையில் நானும், என் கணவரும் எங்கள் மூளைக்கு இன்று வரை தீனி கொடுத்தபடியே இருக்கிறோம்.
எங்கள் நுாலகத்தில் இப்போதும் இருவருமே ஏதாவது புத்தகங்கள் படித்துக் கொண்டும், மறுவாசிப்பு செய்துகொண்டும், படித்தவற்றை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டும், எங்கள் மூளையையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறோம்.
நாங்கள் வாழ்ந்த வாழ்வை திரும்பி பார்க்கும் போது, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லவோ, குறைபட்டு கொள்ளவோ எதுவும் இல்லை என்பது தரும் நிறைவை, வார்த்தைகளில் சொல்லி தெரியவில்லை.
பொதுவாக, முதுமையில் பலருக்கும் ஏற்படும் பெரிய ஆற்றாமை, இனி நாம் இவர்கள் யாருக்கும் தேவையில்லை என்பதால் தான் நம்மை உதாசீனப்படுத்துகின்றனர் என்பதாக தான் இருக்கும்.
வீட்டுக்குள் நமக்கு அப்படி ஒரு நிலை ஏற்படலாம். ஆனால், சமூகத்துக்கு நம்மால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பை செய்யும் போது, நம்மால் பிறருக்கு உதவ முடிகிற உணர்வு ஏற்படும்.
பெரிதாக வேண்டாம்... நம் வீடு அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை எடுத்து செய்து பாருங்கள்.
உதாசீனப்படுத்தப்படுவதான எண்ணம் விலகி, வயோதிகத்திலும் உற்சாகம் நம் கைப்பிடித்துக் கொள்ளும்!