/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சியில் பூசலை துாண்டிவிடும் 'பென் டீம்!'
/
ஆளுங்கட்சியில் பூசலை துாண்டிவிடும் 'பென் டீம்!'
PUBLISHED ON : ஜூன் 22, 2025 12:00 AM

இஞ்சி டீயை ருசித்தபடியே, “ஒருத்தரை மட்டும் பழிவாங்குறதா சந்தேகப்படுறாங்க...” என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துல, கால்நடை டாக்டரா, 10 வருஷத்துக்கும் மேலா இருந்தவர் அசோகன்... கால்நடை பராமரிப்பு துறையில இருந்து வந்த அசோகன், 300 யானைகளுக்கு மேல பிரேத பரிசோதனை பண்ணியிருக்காரு... நிறைய மலை பாம்புகளுக்கு அறுவை சிகிச்சைகளும் செஞ்சிருக்காருங்க...
“வனத்துறை உயர் அதிகாரி ஒருத்தர், அசோகன் உள்ளிட்ட டாக்டர்கள் மீது பல புகார்களை தெரிவிச்சிருந்தாரு... இதுல, மத்தவங்களை விட்டுட்டு அசோகன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாங்க...
“அவரை, கால்நடை துறைக்கே திருப்பி அனுப்பிட்டாங்க... அவர் மீதான புகார்களை ரெண்டு மாசத்துக்குள்ள விசாரிச்சு முடிக்கும்படி ஐகோர்ட் உத்தரவு போட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லைங்க...
“இந்த மாச கடைசியில அசோகன் ஓய்வு பெறணும்... அவர் மீதான விசாரணை நிலுவையில இருக்கிறதால, பதவி உயர்வும் கிடைக்காம, ஓய்வு பெறவும் முடியாம தவிக்கிறாருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“விழா சம்பந்தமா சர்ச்சை ஓடிண்டு இருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த விழாவை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“மதுரை மீனாட்சி அம்மன் கோவில்ல, வருஷா வருஷம் திருஞான சம்பந்தர் குருபூஜை நடக்கும்... மதுரை ஆதீன மடத்தை துவக்கியவர் திருஞானசம்பந்தர் என்பதால, ஆதீன மடாதிபதியா இருக்கிறவருக்கு, கோவில் சார்புல சிறப்பு மரியாதை தந்து, கோவிலுக்கு அழைச்சுண்டு போவா ஓய்...
“சமீபத்துல நடந்த குருபூஜைக்கு ஆதீனத்தை அழைக்க, கோவில் அர்ச்சகர்கள் போயிருந்தப்ப, ஆதீனம் கிளம்பி வர தாமதம் பண்ணியிருக்கார்... அதுவும் இல்லாம, கோவிலுக்குள்ள ஆதீனத்துடன் போன சிலர், மொபைல் போன்களை எடுத்துண்டு போயிருக்கா ஓய்...
“பாதுகாப்புக்கு இருந்த இன்ஸ்பெக்டர் இதை தடுக்க, அவரிடம் கடுமையா வாக்குவாதமும் பண்ணியிருக்கா... இதனால, 'காலம் காலமா பின்பற்றப்படும் மரபை, மதுரை ஆதீனம் மீறிட்டார்'னு ஹிந்து அமைப்புகள் புகார் சொல்றா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“உட்கட்சி பூசலை துாண்டி விடுறதா சொல்லுதாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“தி.மு.க., கட்டமைப்பை வலுப்படுத்தி, சட்டசபை தேர்தல்ல ஆட்சியை தக்க வைக்கிற பொறு ப்பை, முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தலைமையில் இயங்கும், 'பென்' நிறுவனத்திடம் ஒப்படைச்சிருக்காவ... இந்த நிறுவனத்துல இருந்து மாவட்ட வாரியா பலரையும் நியமிச்சிருக்காவ வே...
“இவங்க, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளின் செயல்பாடு, கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு, பலம், பலவீனம் உள்ளிட்ட விஷயங்களை சேகரிச்சு, தலைமைக்கு அறிக்கையா குடுக்காவ...
“இந்த நிறுவன பணியாளர்களிடம் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் நெருங்கி பழகி, தங்களுக்கு பிடிக்காத கட்சி நிர்வாகிகள் மீது புகார்களை அடுக்கி, அவங்களை கட்சியில இருந்து ஓரங்கட்டும் வேலையை செய்யுதாவ வே...
“இப்படி ஓரங்கட்டப் பட்டவங்க, சமூக வலைதளங்கள்ல தங்களது குமுறல்களை பதிவு பண்ணிட்டு இருக்காவ... இதனால, 'கட்சியை பலப்படுத்த வந்த பென் டீமே, கட்சிக்குள்ள பூசலை உருவாக்குது'ன்னு பல இடங்கள்லயும் முணுமுணுப்பு கிளம்பியிருக்கு வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.