/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனி உதவியாளர் நியமித்து வசூல் நடத்தும் அதிகாரி!
/
தனி உதவியாளர் நியமித்து வசூல் நடத்தும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூன் 21, 2025 12:00 AM

''ஐ.எப்.எஸ்., அதிகாரியை நியமிக்காதது ஏன்னு கேக்கறா ஓய்...'' என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் குப்பண்ணா.
''வனத்துறை தகவலாங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஆமா... ஆனைமலை புலிகள் காப்பகத்துல, திருப்பூர் வனக்கோட்டம் இருக்கு... இங்க, சீமை கருவேல மரங்கள் ஏலத்துல முறைகேடு, புலிகள் காப்பக அறக்கட்டளை நிதியில் ஊழல்னு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கு ஓய்...
''திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குநர் மற்றும் மாவட்ட வன அலுவலரா, பெரும்பாலும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை தான் நியமிப்பா... ஆனா, இப்ப பதவி உயர்வு மூலமா ஒரு அதிகாரியை நியமிச்சிருக்கா ஓய்...
''நீலகிரி மாவட்ட தி.மு.க., 'மாஜி' அமைச்சர் செல்வாக்குல இந்த பதவிக்கு வந்தவர், வாரத்துல ரெண்டு நாள் மட்டும் ஆபீஸ்ல தலையை காட்டிட்டு, மாயமாகிடறார்...
''ஏகப்பட்ட நிர்வாக சீர்கேடு இருக்கற இந்த வனக்கோட்டத்துக்கு, ஐ.எப்.எஸ்., அதிகாரியை நியமிக்காதது, வனத்துறையினர் மத்தி யில அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ராஜேஷ், தள்ளி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''மாவட்டச் செயலரை மாத்தினா தான் ஜெயிக்க முடியும்னு சொல்லுதாவ வே...'' என்றார்.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரா இருக்கிறவர், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்... இவரது மகன் ராஜா, மாநகராட்சி கவுன்சிலரா இருக்காரு வே...
''குடும்ப சொத்து பிரச்னையில, அவரது சகோதரி புகார்ல, ராஜாவை போலீசார் கைது பண்ணிட்டாவ... இதனால, கட்சியில இருந்தும் அவரை நீக்கியிருக்காவ வே...
''ஏற்கனவே, கட்சி பணிகள்ல சண்முகநாதன் செயல்பாடு சரியில்லன்னு தலைமைக்கு நிறைய புகார்கள் போயிட்டே இருந்துச்சு...
''போன லோக்சபா தேர்தல்ல, துாத்துக்குடி தொகுதியில் சண்முகநாதனின் சகோதரி மகன் தான் போட்டியிட்டாரு வே...
''ஆனாலும், கட்சியினர் சரியா ஒத்துழைப்பு தராததால அ.தி.மு.க.,வுக்கு, 'டிபாசிட்'டே பறிபோயிட்டு... 'அதே கதை, சட்டசபை தேர்தல்லயும் நடக்காம இருக்கணும்னா, சண்முகநாதனை மாத்தியே தீரணும்'னு தலைமைக்கு பலரும் தாக்கீது அனுப்பிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வசூலுக்குன்னே தனி உதவியாளர் வச்சிருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்துல, ஊரக வளர்ச்சி துறையின் தணிக்கை பிரிவுல ஒரு அதிகாரி இருக்காரு... இவருக்கு பெண் உதவியாளர் ஒருத்தர் இருக்காங்க...
''இருந்தாலும், தனியா ஒரு உதவியாளரை நியமிச்சு, 'கட்டிங்' வசூல் பண்றாருங்க... இந்த அதிகாரியிடமே, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொறுப்பையும் கூடுதலா குடுத்திருக்காங்க...
''ஊராட்சிகளின் வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்றதும் இவர் தான் என்பதால, அதிக வருவாய் இருக்கிற ஊராட்சி செயலர்களை கூப்பிட்டு, கறார் வசூல் நடத்துறாரு... குறிப்பா, அதிக நிதியை செலவழித்த ஊராட்சிகளின் செயலரிடம், தலா 50,000 ரூபாய் வாங்கிடுறாரு...
''தணிக்கை தடைகள் ஏதாவது இருந்தா, அதை சரி செய்ய தனியா 10,000 ரூபாய் வாங்குறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
எதிரில் வந்த நண்பரை நிறுத்திய அண்ணாச்சி, ''உமாசங்கர், நேத்து சரவணன் உம்மை தேடிட்டு இருந்தாரே... பார்த்தீரா வே...'' என பேச, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.