
மரிக்கொழுந்து, லாமியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மத்திய தரைக்கடல் பகுதியை, பூர்வீகமாக உடையது. பண்டைய கிரேக்கர், ரோமானியர், மருத்துவம், சமையலுக்கு பயன்படுத்தியுள்ளனர். தமிழக மருத்துவத்திலும் பயன்படுகிறது.
இதன் இலை மென்மையானது; நறுமணம் நிறைந்தது; இனிப்பு மற்றும் மிளகு கலந்த சுவை உடையது. இது, சூப், இறைச்சி உணவுகள், காய்கறிக் குழம்புகளில் சுவையூட்டியாக பயன்படுகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலிய உணவு வகைகளான பீட்சா, பாஸ்தாவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
இது கற்பூரவல்லி செடியுடன் நெருங்கிய தொடர்புடையது. இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், செரிமான பிரச்னை, தலைவலி, துாக்கமின்மையை போக்க பயன்படுகிறது.
பண்டைய காலத்தில் மகிழ்ச்சியின் சின்னமாகக் கருதப்பட்டு, திருமண விழாக்களில் பயன்படுத்தப்பட்டது. கிரேக்க புராணத்தில், 'அப்ரோடைட்' தெய்வத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செடி வெயில், வடிகால் வசதியுள்ள மண்ணில் வளரும். வீட்டுத் தோட்டத்தில் பானையில் வளர்க்கலாம். பூக்கள் சிறியதாக வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பறவை, தேனீக்களை ஈர்க்கும். சமையல், மருத்துவ கலாசாரத்தில் தனி இடத்தை பிடித்துள்ளது மரிக்கொழுந்து.
- வி.பரணிதா