
குரங்கு இனத்தில் மிகச் சிறிய உயிரினம், அணில் குரங்கு. ஆங்கிலத்தில், 'சாய்மிரி' என்பர். இதற்கு, மிகச்சிறியது என்பது பொருள். செபிடே என்ற விலங்கின குடும்பத்தைச் சேர்ந்தது. காடுகளில் கூட்டமாக வாழும். முகம், வெள்ளை நிறத்திலும், முதுகுப்பகுதி கரும்பச்சை நிறத்திலும், தோள்பட்டை கருப்பு நிறத்திலும் இருக்கும்.
அடர்ந்த முடியுடன் கூடியது வால். இது மரத்தில் ஏறும் போதும், கிளைகளில் தாவும் போதும் உடலை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
பழம், விதை, பூ மற்றும் பூச்சிகள் உண்ணும் அனைத்துண்ணி உயிரினம். தென் மற்றும் மத்திய அமெரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகிறது.
இதன் கை, கால்களில் மட்டுமே வியர்வை வெளியேறும். கோடை காலத்தில் உடலைக் குளிர்விக்க கைகளில் சிறுநீர் கழித்து, உள்ளங்கால்களில் தேய்த்துக் கொள்ளும். அந்த சிறுநீர் ஆவியாகும் போது, உடல் வெப்பம் குறைந்துவிடும்.
காட்டு விலங்கு இறக்குமதிக்கு அமெரிக்கா, 1975ல் தடை விதித்தது. அதுவரை, அணில் குரங்கு அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வீடுகளில் வளர்க்கப்பட்டது. இது, 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக திரும்பிய உயிரினங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றுள்ளது அணில் குரங்கு.
- வ.முருகன்