
குழந்தைகள் அதிகம் விரும்பும் உணவுப் பொருள் சாக்லெட். கோகோ விதையுடன் சர்க்கரை, பால், நறுமணப் பொருட்களை சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. மெக்னீஷியம், கால்ஷியம், பொட்டாஷியம் சத்துகள் அடங்கியுள்ளன.
பழங்காலத்தில் சாக்லெட் பானமாகவே மக்கள் தயாரித்தனர். இப்போதைய வடிவில் சாக்லெட் 1847ல் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகிறது.
சாக்லெட் தயாரிக்க பயன்படும் கோகோ, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் விளைகிறது. இதில் பல வகைகள் உள்ளன.
ஒயிட் சாக்லெட்: கோகோ, வெண்ணெய், சர்க்கரை, பால், நறுமணப் பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில், கசப்பு நிறைந்த கோகோ பயன்படுத்தப்படுவதில்லை. இனிப்பு சுவைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
டார்க் சாக்லெட்: இதில் கோகோ அதிக அளவு கலக்கப்படுகிறது. வெண்ணெய், சர்க்கரை சிறிய அளவில் சேர்க்கப்படுகின்றன. இதில் கசப்பு சுவை இருப்பதால் ஆரோக்கியமானது. கோகோவில் உடலுக்கு நன்மை தரும் வேதிப்பொருட்கள் உள்ளன.
தென் அமெரிக்காவில் மாயன் இன நாகரிகம் சிறப்புற்றிருந்த காலத்தில் சாக்லெட் பானம் பயன்படுத்தியதாக வரலாற்று தகவல்கள் உள்ளன. ஆனால், ஐரோப்பியர், ஜூலை 7, 1550ல் சாக்லெட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் அந்த நாள் உலக சாக்லெட் தினமாக கொண்டாடப்படுகிறது.
- வி.கவுதம சித்தார்த்