PUBLISHED ON : ஜூலை 21, 2024

அகத்தியர் படத்தில், பாடலின் பல்லவியிலேயே ராவணனின் அகங்காரமும், பாடல், 'நாட்டை' ராகத்திலும் அமைய வேண்டும் என, கவிஞர் உளுந்துார்பேட்டை சண்முகத்திடம் கூறினார், இயக்குனர் ஏ.பி.என்.,
உடனே சண்முகமும், 'வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன் எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...' என, எழுதினார்.
இயக்குனர் நாகராஜனுக்கு அந்த பல்லவி, மிகவும் பிடித்து விட்டது. அதன் பிறகு முழுப்பாடலையும் எழுதி முடித்தார். பாட்டின் பின்னணியில், ராவணனின் இசை கேட்டு சிவனே நேரில் வந்தார் என்ற செய்தியையும் வரிகளாக்கி இருப்பார்.
'இசை கேட்டு எழுந்தோடி வந்தான்; உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்...' -என்பதே, அவ்வரிகள். பின்னும் அந்தப் பாட்டில் ஆரபி, அம்சத்வனி, சண்முகப்பிரியா, தர்பார், மோகனம், கல்யாணி, கவுரி மனோகரி என, நிறைய ராகங்களை இணைத்து இருப்பார்.
பாடல் முடிந்ததும் இயக்குனர், ஏ.பி.என்., கவிஞர் உளுந்துார் பேட்டை சண்முகத்தை பாராட்டியதுடன், ஒரு பாட்டுக்கு என்ன பணம் கொடுப்பாரோ அதைவிட அதிகமாக கொடுத்தார்.
காரைக்கால் அம்மையார் படம், ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், கே.பி.சுந்தராம்பாள் நடித்தது. அப்படத்திற்கு, குன்னக்குடி வைத்தியநாதன் தான் இசை. படத்தில், கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் பாட வேண்டும்.
கே.பி.எஸ்.சிடம், 'இந்தப் படத்தில் நீங்கள், குன்னக்குடியின் இசையில் பாடலைப் பாடுகிறீர்கள்...' என்றார், ஏ.பி.என்.,
உடனே, 'வழக்கமாக உன் படத்துக்கு, கே.வி.மகாதேவன் தானே இசை அமைப்பார். குன்னக்குடி என் கச்சேரிக்கு வயலின் வாசித்தவர். இசை அமைப்பாரா...' என்று கேட்டார், கே.பி.எஸ்.,
குன்னக்குடி, தன் பாட்டுக்கு நன்றாக இசை அமைப்பாரா என்ற சந்தேகம், கே.பி.எஸ்.சுக்கு இருப்பது, ஏ.பி.நாகராஜனுக்கு புரிந்து விட்டது. அதனால், உடனே கண்ணதாசனிடம் அந்த சூழ்நிலைக்கான பாடலை எழுதி வாங்கினார்.
அதைக் குன்னக்குடியிடம் கொடுத்து, 'இப்பாடலுக்கு ஒரு மெட்டுப் போட்டு, கே.பி.எஸ்., வீட்டுக்குப் போய் நீங்களே அதை பாடி காட்டுங்கள். அவர் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்தால் தான், நீர் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியும்...' என்றார், ஏ.பி.என்.,
கண்ணதாசன் எழுதிய பாடலுடன் கே.பி.எஸ்., வீட்டுக்கு சென்றார், குன்னக்குடி வைத்தியநாதன்.
'வாடா வைத்தி, இசை அமைப்பாளராய் மாறி விட்டாயா. அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஏ.பி.என்., உன்னிடம் எல்லாம் சொல்லியிருப்பார்...' என்றார், கே.பி.எஸ்.,
'அண்ணா எல்லாம் சொன்னார். நீங்க பாட வேண்டிய பாடலுக்கு, மெட்டுப் போட்டு வந்திருக்கேன். அதை நான் பாடிக் காட்டறேன். உங்களுக்குப் பிடிச்சா, நான் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறேன். இல்லாட்டி அப்படியே ஒரு நமஸ்காரம் பண்ணிட்டுப் போயிடறேன்...' என்றார், குன்னக்குடி வைத்தியநாதன்.
அப்படி குன்னக்குடி இசையமைத்து, கே.பி.எஸ்.,க்கும் பிடித்த பாடல், 'தக தக தக தக வென ஆடவா சிவசக்தி சக்தி சக்தி சக்தியோடு ஆடவா...'
பாடல் மெட்டுக்கு, கே.பி.எஸ்.,சிடம் ஒப்புதல் வாங்கியாகி விட்டது.
அடுத்து, 'பாட்டுக்கு சிவனும், சக்தியுமாக யார் நடனமாடுகின்றனர்?' என, சந்தேகத்தை கிளப்பினார், கே.பி.எஸ்.,
'ஸ்ரீவித்யாவும், நடிகர் சிவகுமாரும் ஆடுகின்றனர்...' என்றார், ஏ.பி.நாகராஜன்.
அதைக் கேட்டதும், 'ஸ்ரீவித்யா, எம்.எல்.வசந்தகுமாரி பொண்ணு. சங்கீத குடும்பத்தை சேர்ந்தவள்; நல்லா ஆடிடும். இந்த, சிவகுமார் சரியா ஆடுவாரா...' என்றார், கே.பி.எஸ்.,
இயக்குனர் அதற்கு நம்பிக்கை உத்தரவாதம் கொடுக்கவே, படப்பிடிப்புக்கு ஒப்புக்கொண்டார், கே.பி.சுந்தராம்பாள்.
அப்பாடலுக்கு நன்றாக ஆட, சிவகுமாருக்கு பல நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. நடன இயக்குனர் கோபால கிருஷ்ணனின் மேற்பார்வையில், அவரது உதவியாளர், 15 நாட்கள் ஒத்திகையில், சிவகுமாரை சாறாக பிழிந்து விட்டார்.
அதன்பின், கே.பி.எஸ்., பாட சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் சிவன், பார்வதியாக நடனமாட, நடனம் சிறப்பாக அமைந்தது.
தமிழில் முதன் முதலில், 'சினிமாஸ்கோப்' படத்தை இயக்கிய பெருமை, ஏ.பி.நாகராஜனையே சாரும். அப்படத்தைத் தயாரித்தவர், சென்னை, ஆனந்த் திரையரங்கு அதிபர், ஜி.உமாபதி.
ஏ.பி.நாகராஜனின் மிக நெருங்கிய நண்பர், உமாபதி.
'நான் படம் தயாரிப்பதாக இருந்தால், மாமன்னர் ராஜராஜ சோழன் கதையைதான் படமாக்குவேன், அதை, ஏ.பி.நாகராஜன் தான் இயக்குவார்...' என்றார், உமாபதி. சொன்னபடி அவரே அப்படத்தைத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் இயக்கினார்.
அரு.ராமநாதன் எழுதி, டி.கே.எஸ்., சகோதரர்களால் நடத்தப்பட்ட, ராஜராஜ சோழன் நாடகக் கதையை வாங்கி, அதற்கு, திரைக்கதை அமைத்தார், ஏ.பி.நாகராஜன்.
பழம்பெரும் நடிகையும், சொந்தக் குரலில் பாடுபவருமான, எஸ்.வரலட்சுமியை, ராஜராஜ சோழன் படத்தில், ராஜராஜ சோழனின் மனைவியாக நடிக்க, ஒப்பந்தம் செய்தார், ஏ.பி.நாகராஜன்.
அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்து, ஒரு நிபந்தனை விதித்தார்.
— தொடரும்.
நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.
திருமலை தென்குமரி படப்பிடிப்புக்கு இடையே, கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தியேட்டரில், தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக, ஏ.பி.என்.,னுக்கு மத்திய அரசின் விருது கிடைத்தற்காக பாராட்டு விழா ஏற்பாடாகி இருந்தது. திருமலை தென்குமரி படப்பிடிப்புக் குழுவில் நடிகர் சிவகுமாரும் இருந்தார். அவருக்கு, சூலுார் பக்கத்திலுள்ள காசிக்கவுண்டன் புதுார், சொந்த ஊர். எனவே, ஏ.பி.என்., விழா மேடையில் பேசும்போது, 'எங்க கூட, நம்ம ஊர் பையன் சிவகுமாரும் வந்திருக்காரு. அவரு நம்ம வீட்டுப்பிள்ளை. அவருக்கு இன்னும் கல்யாணமாகல. நம்ம ஊருல அவருக்கு ஒரு நல்ல பொண்ணப் பாருங்க, நானே வந்திருந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...' என்றார். அதன்படியே, சிவகுமாருக்கு கல்யாணம் நடந்தபோது, நேரில் சென்று, நடத்தி வைத்தார், ஏ.பி.என்.,
- கார்த்திகேயன்