
பண்ணை சுற்றுலா!
சில நாட்களுக்கு முன், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். பள்ளியில் படித்து வரும் உறவினர் மகன், அன்று காலை தான் சுற்றுலா சென்று வீடு திரும்பினான். சென்ற இடத்திலிருந்து வாங்கிய விளை பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்து காட்டிக் கொண்டிருந்தான்.
'தம்பி, சுற்றுலா எங்கெங்கு சென்றீர்கள், ஜாலியாக இருந்ததா?' என, கேட்டேன். அதற்கு, 'நீங்கள் நினைப்பது போல், ஜாலி சுற்றுலா செல்லவில்லை. இது, பண்ணை சுற்றுலா...' என்றான். 'விளக்கமாக சொல்...' என்றேன்.
'இரண்டு நாள் டூரில் பல்வேறு பண்ணைகளுக்கு சென்றோம். பண்ணையில் தங்கி, நேரில் பல விளக்கம் பெற்றோம். உற்பத்தி, தயாரிப்பு முறை, விளை பொருள், விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிப்பு பற்றி தெரிந்து கொண்டோம்.
'மேலும், வேளாண்மை தொழில் மற்றும் நெல் சாகுபடியுடன் இணைந்து மண் புழு உரம் தயாரிப்பு பற்றியும்; ஆடு, மாடு, பன்றி பண்ணை; வெல்லம் தயாரிப்பு, விளை பொருளை மதிப்புக் கூட்டி பொருள் தயாரிப்பு, பாரம்பரிய அரிசி வகை, இயற்கை வேளாண் முறை மற்றும் தற்சார்பு வேளாண் முறை என, பலவற்றை அறிந்து தெளிவு பெற்றோம்...' என்றான்.
பள்ளி நிர்வாகம், ஜாலி சுற்றுலா என்பதற்கு மாற்றாக, பண்ணை சுற்றுலாவாக ஏற்பாடு செய்திருந்தது, பாராட்டுக்குரியது. நகர் பகுதி மாணவர்களுக்கும், இதுபோன்ற பயனுள்ள சுற்றுலாவை அறிமுகப்படுத்தலாமே!
சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.
உழைத்து வாழும் முதிய தம்பதி!
சமீபத்தில், நெருங்கிய நண்பரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென, வீட்டு உரிமையாளரிடம் கோரிக்கை விடுத்தார். சிறிது நேரத்தில், நண்பரின் வீட்டுக்கு வயதான தம்பதியர் வந்தனர்.
அவர்களிடம் விசாரிக்க, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய, வீட்டு உரிமையாளர் அனுப்பியதாக கூறினர். இவர்களா அந்த வேலையை செய்யப் போகின்றனர் என்று, நண்பரும், நானும் சந்தேகமாக பார்த்தோம். அதை பொருட்படுத்தாத அவர்கள், விறுவிறுவென மாடி ஏறி, தண்ணீர் தொட்டியருகே சென்றனர்.
முதியவர், தொட்டியை கழுவி, நீரை இறைத்து தர, கடகடவென வாங்கி ஊற்றினார், மூதாட்டி. தொட்டியை சுத்தம் செய்த பின், அவர்கள் கேட்ட தொகையை விட, கூடுதலாக கொடுத்தார், நண்பர்.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, குறைந்த வாடகையில், சிறிய வீட்டில் தங்கியுள்ளனர். அழைப்பவர்கள் வீட்டிற்கு சென்று தோட்ட வேலை, வீட்டை சுத்தம் செய்யும் வேலை மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் வேலை என்று, தினசரி கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வருவதாக கூறினர்.
மேலும், இங்கே சம்பாதிக்கும் பணத்தை, சிக்கனமாக செலவு செய்து, கல்லுாரியில் படிக்கும் மகன், மகளுக்கு அனுப்புகின்றனராம். மீதியை சேமித்து, உள்ளூரில் சிறிதாக வீடு ஒன்றையும் கட்டி விட்டனராம். இதை சொல்லும்போது, அவர்களின் முகத்தில் தோன்றிய பெருமிதம், உழைத்து வாழும் எண்ணம் கொண்டவர்களுக்கே உரியதாக இருந்தது. அவர்களை மனதார வாழ்த்தினேன்!
- வி.சங்கர், சென்னை.
புதுமையான, 'கிப்ட்'
பெரும்பாலான திருமண விழாக்களில், பெற்றோருடன் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு, ஐஸ்கிரீம், பாப்கார்ன் போன்றவற்றைத் தருவது வழக்கம். நண்பர் ஒருவரது மகன் திருமணத்தில், வழக்கமானவைகளுடன், பனை ஓலையில் செய்யப்பட்ட காற்றாடி, கிலுகிலுப்பை, வாட்ச் மற்றும் பொம்மைகளையும், களி மண்ணால் செய்யப்பட்ட சொப்புக்களையும், குழந்தைகளுக்கு தர ஏற்பாடு செய்திருந்தார்.
அதை வாங்கிய குழந்தைகள், மண்டபத்தில் அங்குமிங்கும் ஓடி, உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாடியதைக் கவனித்தேன். இதுபற்றி உறவினரிடம் கேட்டேன்.
'எங்கும், எப்போதும், மொபைல் போனிலேயே குழந்தைகள் மூழ்கிடறாங்க. அதிலிருந்து அவர்களை மீட்கவும், கைவினைப் பொருட்கள் செய்யுறவங்களுக்கு ஆதரவளிக்கவும், என் வீட்டு திருமண விழாவைப் பயன்படுத்திக்க நினைச்சேன்.
'அதுக்காகத்தான், பனை ஓலையாலும், களிமண்ணாலும் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை தரச் சொல்லியிருந்தேன்...' என்றார். அவரின் அந்த பயனுள்ள முயற்சியை, அனைவருமே பாராட்டினர்!
— ஆர்.செந்தில்குமார், மதுரை.