sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (7)

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (7)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (7)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (7)


PUBLISHED ON : ஜூலை 06, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாஜி கேட்ட கேள்வி! அமைதியான மார்லன் பிராண்டோ!

சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் பணியாற்றிய சிவாஜியின் நண்பர், அமெரிக்க குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுங்களேன் எனக் கேட்டுக் கொண்டதும், உடனே சம்மதம் சொல்லி விட்டார், சிவாஜி.

ஆனால், என்ன பரிசு கொடுப்பது, கொடுக்கும் பரிசு, அமெரிக்க குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டுமே என்ற கவலை, சிவாஜிக்கு.

நீண்ட யோசனைக்குப் பின், ஒரு யானைக்குட்டியை அமெரிக்க குழந்தைகளுக்கு பரிசாக அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தியாவிலிருந்து விமானத்தில், இண்டியானா போலிஸ் என்ற அமெரிக்க நகரத்துக்கு அந்த யானைக் குட்டியை அனுப்பி வைத்தார்.

இந்திய சினிமா நடிகர் ஒருவர், அமெரிக்க குழந்தைகளுக்காக ஒரு யானைக்குட்டியை பரிசாக அனுப்பி வைத்த தகவல், அன்று, ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கு தெரிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு வித்தியாசமான பரிசை அனுப்பி வைத்த இந்திய நடிகர் பற்றி ஆர்வத்துடன் விசாரித்திருக்கிறார், ஜனாதிபதி கென்னடி.

உடனே, அவரது உத்தரவின் படி, இந்திய- - அமெரிக்க கலாசாரப் பரிவர்த்தனையின் கீழ், அமெரிக்க அரசின் விருந்தினராக, அமெரிக்காவுக்கு வரும்படி, சிவாஜிக்கு அழைப்பு வந்தது.

சென்னையிலிருந்து தமிழ் தெரிந்த, அமெரிக்க துாதரக அதிகாரியும், சிவாஜியுடன் அமெரிக்கா சென்றார்.

ரோம், லண்டன், பாரிஸ் வழியாக அமெரிக்கா சென்று இறங்கிய சிவாஜிக்கு, எல்லா இடங்களிலும் வி.வி.ஐ.பி., மரியாதை.

சிவாஜிக்கு உதவியாக இரண்டு அரசு அதிகாரிகளை, அவர் கூடவே இருக்க, அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருந்தது. சிவாஜி பயன்படுத்த, இரண்டு கார்களையும் கொடுத்தனர்.

இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத மரியாதை.

இந்த வசதிகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் அரசு விருந்தினராக சிவாஜி தங்கி இருந்த நாட்களில், நாளொன்றுக்கு, 160 அமெரிக்க டாலர் கைச்செலவுக்காகவும் கொடுத்தனர்.

அமெரிக்காவில் இருக்கும் போது, ஹாலிவுட் நட்சத்திரங்களை சிவாஜி சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

தி அக்ளி அமெரிக்கன் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த, மார்லன் பிராண்டோ, தன்னுடன் மதிய உணவு சாப்பிட, சிவாஜியை அழைத்திருந்தார். இருவரும் உணவருந்தியபடியே வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மார்லன் பிராண்டோவிடம், 'நீங்கள் இந்திய திரைப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா?' எனக் கேட்டார், சிவாஜி.

'சத்யஜித்ரேயின் படங்கள் பார்த்திருக்கிறேன். அந்த படங்களில் இந்தியாவின் வறுமையையும், சாக்கடையில் பன்றிகளோடு குழந்தைகள் விளையாடுவதையும், பெண்கள் வறுமை காரணமாக, விபசாரத்தில் ஈடுபடுவதையும் பார்த்து, இந்தியா இப்படியா இருக்கிறது என, கண் கலங்கினேன்...' என, வருத்தத்துடன் சொன்னார், பிராண்டோ.

அதற்கு, 'அமெரிக்காவில் நீங்கள் எல்லாம் பணக்காரர்கள். இந்தியாவின் வறுமை உங்களுக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், அது இந்தியாவின் ஒரு முகம். அவ்வளவு தான். அதை வைத்து இந்தியா முழுவதும் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து விடக்கூடாது...' என, அமைதியான குரலில், அழுத்தமாக கூறினார், சிவாஜி.

தொடர்ந்து, 'நானும் ஒரு நடிகன். நீங்களும் ஒரு நடிகன். என்னைப் பாருங்கள். நான் உடை உடுத்தியுள்ள விதத்திலோ, உங்களோடு பழகும் விதத்திலோ அல்லது வேறு வகையிலோ என்னைப் பார்க்கிறீர்கள் இல்லையா? உங்களால் ஏதாவது குறை கண்டுபிடிக்க முடியுமா? இந்தியா குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன என்பதை இப்போது சொல்லுங்கள்...' எனக் கேட்டார், சிவாஜி.

சிவாஜியின் கேள்விக்கு, மார்லன் பிராண்டோவால் பதில் சொல்ல முடியவில்லை.

தன் எதிரில் இருந்த காபியை எடுத்து பருகத் துவங்கினார்.

'மார்லன் பிராண்டோ பதில் சொல்லா விட்டாலும், நிச்சயம், இந்தியா பற்றிய தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்...' என, பெருமையாக சொல்வார், சிவாஜி.

அந்த அமெரிக்க பயணத்தின் போது, மர்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர், ரிச்சர்டு பர்ட்டன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அமெரிக்க அரசின் அழைப்பில், அமெரிக்கா வந்து, ஹாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்த அனுபவங்களை சிவாஜியே நேரடியாக சொல்லக் கேட்ட அனைவருக்கும் மகிழ்ச்சி.

சிவாஜியை கவுரவிக்கும் விழாவில் கலந்து கொண்ட கொலம்பஸ் நகர, மேயர், சிவாஜிக்கு, சாவி ஒன்றை அளித்து, 'கொலம்பஸ் நகரத்தின் கவுரவக் குடிமகன்' என்ற பெருமையையும் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எல்லாருக்குமே அன்றைய நிகழ்ச்சி மன நிறைவை தந்தது.

'பார்ட்டி என்றால் சும்மா எல்லாரும் கூடி அரட்டை அடித்து, சாப்பிட்டு விட்டுக் கலைந்து செல்வது தான், நம் வழக்கம். ஆனால், நீங்களும், சிவாஜியும் சேர்ந்து இன்றைய தினத்தை எங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாததாக ஆக்கிவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை, டாக்டர்...' என, நெகிழ்ச்சியோடு சொல்லி விடை பெற்றனர்.

சென்னையில் இருக்கும் போது, சிவாஜி எந்த அளவுக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் காட்டுவார் என, எனக்கு தெரியாது. ஆனால், அமெரிக்கா வரும் போது, சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதும், வீட்டிலேயே படம் பார்ப்பதும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

என் வீட்டில் பெரிய திரையுடன், ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கே, சிவாஜியுடன் அமர்ந்து ஜாலியாக பல படங்களை, நாங்கள் பார்த்திருக்கிறோம்.

நவரசங்களையும் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தும் அபாரமான ஒரு நடிகர் சிவாஜி. எனவே, அவருக்கு போட்டு காட்டுவதற்காக, நடிப்புக்கு சவால் விடும் வகையிலான கதைகள், கதாபாத்திரங்கள், காட்சிகள் கொண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். எல்லாமே உருக்கமான சீரியஸ் ரக படங்கள்.

அவற்றின் பெருமைகளை சொல்லி, 'இதில் எந்த படத்தைப் போட? எதைப் பார்க்கிறீர்கள்?' என, அவரிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், நான் சற்றும் எதிர்பார்க்காதது.

அது என்ன?

— தொடரும்எஸ். சந்திரமவுலி






      Dinamalar
      Follow us