
கிராமத்து இளைஞர்களின் சேவை!
கிராமத்திலிருக்கும் என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவ்வூரிலுள்ள ஒரு வீட்டின் முன்பு, 'பசுமை பாதுகாப்பு குழு' என்ற, 'போர்டு' இருப்பதை பார்த்தேன்.
அதுபற்றி உறவினரிடம் வினவினேன்.
'எங்கள் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஊரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, தன்னார்வக் குழு அமைத்துள்ளனர். அவர்கள் மரம் நடுதல், கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
'அவர்கள் முதலில், ஊர் மக்களை ஒருங்கிணைத்து, பொது இடங்களில், பள்ளி மைதானங்கள், கோவில் வளாகங்கள் மற்றும் சாலையோரங்களில் மரங்களை நட்டனர். மேலும் அவர்கள், பொதுமக்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, அவற்றை பராமரிக்கும் பொறுப்பையும் அவர்களிடமே கொடுத்தனர்.
'அதோடு, கழிவு மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி, வீடுகளில் உள்ள கழிவுகளை பிரித்து, மட்கும் கழிவுகளை உரமாக்கி, மட்காதவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பினர். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை இலவசமாக வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'இத்தகைய பணிகளால், ஊரின் சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி, சமூகத்திற்கு முன்மாதிரியாக அமைந்து, இயற்கையை பாதுகாக்கும் உறுதியை வலுப்படுத்தியுள்ளது...' என்றார்.
அந்த கிராமத்து இளைஞர்களின், தன்னலமற்ற சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்தினேன்.
வி.முருகன், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
'பப்பிங்'கைப் புறக்கணிப்போம்!
இப்போதெல்லாம், மொபைல் போனுக்குள் அனைவரும் அடைக்கலம் ஆகிவிட்டனர். மொபைல் போன் மட்டும் இருந்து விட்டால், அக்கம்பக்கம் யாரையும் மதிக்க தேவையில்லை என்பது, எழுதப்படாத விதியாகி விட்டது.
முன்பெல்லாம் பயணங்களின் போது நட்பாகி, வாழ்நாள் உறவாகத் தொடர்ந்தவர்கள் பலர் உண்டு.
'ரயில் சினேகம்' என்ற வார்த்தை உருவாகக் காரணமான, நட்புகளும் ஏராளம் உண்டு. அவரவர் நிறுத்தத்தில் இறங்கிப் போய் விட்டாலும், அவர்களுடன் பேசிக் களித்த விஷயங்கள், வாழ்நாள் முழுமைக்குமான நல்ல நினைவுகளாக மனதில் தேங்கி இருக்கும்.
இன்றைய நாளில் மொபைல் போனை கையில் வைத்து, 'ரீல்ஸ்' பார்த்து, குறுஞ்செய்திகள் அனுப்பி, யாருடனாவது பேசியபடி தான் பயணிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் அதே நிலை தான். நிமிடத்திற்கு ஒருமுறை மொபைல் போனை பார்த்தபடி தான், உரையாடலும் தொடர்கிறது. காத்திருக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இப்படித்தான். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. நண்பர்களுக்கும் இதே நிலை தான்.
இது போல, மொபைல் போனுக்கு முக்கியத்துவம் தந்து, மனிதர்களை புறக்கணிப்பதை, 'பப்பிங்'(phubbing) என்கின்றனர்.
இப்படி மனிதர்களை புறக்கணிக்கும் நிலையால், விவாகரத்துகள் துவங்கி, உறவுகளுக்குள் தீர்க்க முடியாத பிரச்னை வரை, ஏராளமான உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எந்த ஒரு கருவியும் மனிதனின் வாழ்க்கை முறையைச் செம்மைப்படுத்தி, நேரத்தை மிச்சப்படுத்தி, உறவுகளை மேம்படுத்தப் பயன்பட வேண்டும். நமக்கு எஜமானனாக ஆகிவிட்ட ஒரு கருவியால், மனிதன் அடிமையாக மாறிப் போவதை இனியும் அனுமதிக்க கூடாது.
உறவுகளை மதிப்போம். அவர்களுக்குரிய நேரத்தை கொடுப்பதே, உறவை வளர்க்கும் சிறந்த வழியாகும்.
சி.சரஸ்வதி, ஈரோடு.
பயனுள்ள பரிசு கொடுக்கலாமே!
கடந்த வாரம் என் உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு சென்றிருந்தேன். அப்போது என் அருகில் இருந்த சிலர், 'இவன் மிகவும் கஷ்டத்தில் இருந்தானே... இப்போது என்னவென்றால் புது வீடு கட்டி மகிழ்ச்சியாக இருக்கிறானே...' என, பொறாமையுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
விழா முடிந்து கிளம்பியவர்களிடம் உண்டியலை பரிசாக அளித்தார், உறவினர்.
எனக்கு இது புதுமையாக இருக்கவே, அவரிடம் சென்று பொதுவாக, 'இது போன்ற நிகழ்ச்சிகளில் தேங்காய், தட்டு அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களை தருவதை தான் பார்த்திருக்கிறேன். நீங்கள் என்ன புதுமையாக உண்டியலை தருகிறீர்...' என்றேன்.
அதற்கு அவரோ, 'நான் சிறுவயது முதலே வறுமையான குடும்பத்தில் வளர்ந்தவன். என் தாய் எனக்கு கற்று கொடுத்த பாடம் தான், சேமிப்பு. அந்த சேமிப்பில் வாங்கியது தான், இந்த வீடு. இப்போது பல வசதிகள் என்னிடம் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் என் சேமிப்பு பழக்கம் தான்.
'எனவே, என் வீட்டு விழாவுக்கு வந்த அனைவருக்கும் சேமிப்பின் அருமையை புரிய வைக்கும் விதமாக, உண்டியலை பரிசளித்தேன்...' என்றார்.
அதை கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் அளித்த உண்டியலிலேயே நானும், என் சேமிப்பு பழக்கத்தை துவங்கி விட்டேன்.
குடும்ப விழாக்களில் தேவையற்ற பொருட்களை பரிசாக கொடுப்பதற்கு பதிலாக, இதுபோல பயனுள்ள பொருட்களை அளித்து ஊக்குவிக்கலாம்.
யாழிசை, சென்னை.