
ஜூலை 6 - கோபத்ம விரதம் ஆரம்பம்
நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக ஒரு விரதத்தை அனுஷ்டிக்கின்றனர், வட மாநில பெண்கள். இதற்கு, கோபத்ம விரதம் எனப் பெயர்.
கோ, என்றால் பசு. பத்மம் என்றால், தாமரை. விலங்குகளில் உயர்ந்தது, பசு. மலர்களில் உயர்ந்தது, தாமரை; இது லட்சுமியின் உறைவிடம். பசுக்களைப் பாதுகாக்கவும், தாமரை மலருக்கு மரியாதை செய்யவும் உருவாக்கப்பட்டதே, கோபத்ம விரதம்.
சாதுர்மாஸ்யம் என்றால், நான்கு மாதங்கள். துறவிகள் விரதம் இருக்கும் காலம் எனக் கூறுவர். இதே காலகட்டத்தில், இல்லறத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டியது, கோபத்ம விரதம்.
இந்த விரதம் பிறந்த காரணத்தைக் கேளுங்கள்...
தேவலோக நாட்டிய தாரகை, ரம்பா, அனைவர் முன்னிலையிலும் நடனமாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு மத்தளம் உடைந்து விட்டது.
'ஆன்மிகத்தில் திளைத்தவர்களில் எவர், இந்த உலகில் விரதங்களை சரியாக அனுஷ்டிக்க வில்லையோ, அவரது தோலை உரித்து, மத்தளத்தை சரி செய்யுங்கள்...' என, உத்தரவிட்டான், தேவர் தலைவன் இந்திரன்.
பணியாளர்கள் புறப்பட்டனர்.
கிருஷ்ணரின் தங்கை சுபத்ரா மட்டுமே விரதத்தை சரியாக அனுஷ்டிக்கவில்லை என, தெரிய வந்தது. அவளது தோலை உரிக்க ஆணையிட்டான், இந்திரன்.
இதையறிந்து, தங்கையைக் காப்பாற்ற சென்றார், கிருஷ்ணர்.
'நீ ஏன் விரதங்களை அனுஷ்டிப்பதில்லை?' என்றார், கிருஷ்ணன்.
'தெய்வமான நீயே என் அண்ணனாக இருக்கும் போது, நான் ஏன் விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்? நீ என்னை காப்பாற்ற மாட்டாயா?' என, எதிர்க்கேள்வி தொடுத்தாள், சுபத்ரா.
அவளைக் கண்டித்தார், கிருஷ்ணர்.
'தெய்வமோ, தேவரோ, மனிதரோ யாராயினும், விரதங்களை முறையாக அனுஷ்டிக்க வேண்டும். நீ, ஒரு பசுவும், கன்றும் உருவத்தை கோலமாக வரை. பசுவின் மீது, முப்பத்து முக்கோடி தேவர்களையும் குறிக்கும் வகையில், 33 தாமரை மலர்களை வரைந்து வை.
'கன்றின் மேல், ஆறு மோகினி தேவதைகளைக் குறிக்கும் வகையில், ஆறு தாமரை மலர்கள் இடம் பெறட்டும். பசுவை சுற்றி திருமாலின் பாதங்கள், கருடன், சங்கு, சக்கரம், கதாயுதம், சுவஸ்டிக், புல்லாங்குழல், துளசி இலை மற்றும் மங்கலச் சின்னங்களின் வடிவை வரை.
'இந்த கோலத்தை, 33 முறை வரையவும். கோலத்தை மாட்டுத் தொழுவம், துளசி மாடம், ஆறு, குளக்கரைகளில் வரைவது நல்லது. இதனால், லட்சுமி கடாட்சம், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்...' என்றார்.
அதிலிருந்து ஆரம்பித்தது தான், இந்த விரதம்.
இந்த விரதத்தை வடமாநில சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்கின்றனர். விரத காலத்தில் எளிய சைவ உணவே உட்கொள்வர். தமிழகத்திலும் குறைந்தபட்சம், நம் வீட்டில் ஒரு சுத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து, கோலமிட்டு பசுவை வணங்கலாம். பசுக்களுக்கு உணவளித்து புண்ணியம் சேர்க்கலாம்.
இந்த விரதத்தை, ஜூலை 6ல் துவங்கி, நவம்பர் 2 வரை அனுஷ்டிக்கலாம். தினமும் முடியாவிட்டாலும், ஒரு நாளாவது இந்த ரங்கோலி விரதத்தை அனுஷ்டிக்கலாமே!
தி. செல்லப்பா