/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தம்பதியிடம் ரூ.1 கோடி கொள்ளை; பெங்களூரில் சிக்கிய 8 பேர் கும்பல்
/
தம்பதியிடம் ரூ.1 கோடி கொள்ளை; பெங்களூரில் சிக்கிய 8 பேர் கும்பல்
தம்பதியிடம் ரூ.1 கோடி கொள்ளை; பெங்களூரில் சிக்கிய 8 பேர் கும்பல்
தம்பதியிடம் ரூ.1 கோடி கொள்ளை; பெங்களூரில் சிக்கிய 8 பேர் கும்பல்
ADDED : செப் 29, 2025 05:00 AM
பெங்களூரு : தம்பதியையும், கார் ஓட்டுநரையும் கடத்தி சென்று, 1.1 கோடி ரூபாய் கொள்ளையடித்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் மோகன்; பாக்கு வியாபாரி. இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மோடராம் என்பவர், 1.1 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பணத்தை அவரிடம் வாங்கி வரும்படி கூறி, நேற்று முன்தினம் மாலை, பாக்கு வியாபாரி மோகன், தன் கார் ஓட்டுநர் ஹேமந்தை, எலக்ட்ரானிக் சிட்டிக்கு அனுப்பினார். தொழிலதிபர் மோடராமின் மொபைல் எண்ணையும் கொடுத்திருந்தார்.
இதன்படி ஓட்டுநரும், அங்கு சென்று தொழிலதிபருக்கு போன் செய்தார். அவரும் ஹுலிமாவு, அக்ஷயா நகரின், அக்ஷயா பூங்காவுக்கு வரும்படி கூறியுள்ளார். ஓட்டுநர் ஹேமந்தும் அங்கு சென்றார். தொழிலதிபர் மோடராம், தன் மனைவியுடன் காரில் அங்கு சென்றார். காரின் பின் இருக்கையில் பணம் இருப்பதாக, ஓட்டுநரிடம் கூறினார். மூவரும் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த சில நபர்கள், 'நாங்கள் போலீசார், உங்களை சோதனையிட வேண்டும். கீழே இறங்குங்கள். வீடியோ எடுக்கிறோம்' என்றார்.
மற்றொரு நபர் மொபைல் போனில், காரை படம் பிடித்தார். இது குறித்து தொழிலதிபர் கேள்வி எழுப்பிய போது, அவரையும், அவரது மனைவியையும் தாக்கினர்.
அப்போது தொழிலதிபர், கார் கதவை, 'லாக்' செய்து வேகமாக ஓட்டி சென்றார்.
ஆனால், பைக்கில் விரட்டி வந்த நபர்கள், காரை வழிமறித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, பலவந்தமாக அழைத்து சென்றனர். தம்பதியையும், ஓட்டுநரையும் காலி ஷெட்டில் அடைத்து வைத்தனர். அவர்களின் மொபைல் போன்களை பறித்து கொண்டனர்.
பின், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக மிரட்டினர். ஓட்டுநர் ஹேமந்த் மூலமாக, பாக்கு வியாபாரி மோகனுக்கு போன் செய்து, பணம் கேட்டனர். அவர் பணம் தர சம்மதிக்கவில்லை. இரண்டு மணி நேரம் மூவரையும், பணையமாக வைத்திருந்தனர். பணம் காரில் இருப்பதை தெரிந்து, அதை திருடிக் கொண்டனர்.
தன் ஓட்டுநரின் மூலம் தகவல் தெரிந்து கொண்ட மோகன், தாமதிக்காமல் ஹுலிமாவு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். போலீசாரும் விரைந்து செயல்பட்டு, ஓட்டுநர் ஹேமந்தின் மொபைல் லொகேஷனை வைத்து, அவர் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
கடத்தல்காரர்கள் எட்டு பேரை கைது செய்தனர். தம்பதியையும், ஓட்டுநரையும் மீட்டனர். 1.1 கோடி ரூபாய் ரொக்கம், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
புகார் வந்த 15 நிமிடங்களில், கொள்ளை கும்பலை பிடித்து, மூவரை பாதுகாப்பாக மீட்ட ஹுலிமாவு போலீசாரை, நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் பாராட்டினார். அவர்களுக்கு 20,000 ரூபாய் ரொக்கப்பரிசு அறிவித்தார்.

