ADDED : ஜூன் 13, 2025 11:06 PM
தொடரும் பலி படலம்!
பக்கத்து மாநில தலைநகரத்துக்கு செல்ல விரைவு சாலை முழுமை பெற இன்னும் தாமதமாகும்னு சொல்றாங்க. இருந்தாலும், பூங்கா நகர் முதல் 75 கி.மீ., வரையிலான கோல்டு சிட்டி வரையில் வாகனங்கள் செல்ல அதிகாரப்பூர்வமற்ற அனுமதி வழங்கி இருக்காங்க.
முழுசா இன்னும் சாலை திறப்பு நடக்கவே இல்லை. இதற்குள்ளாக சாலையில் உயிர் பறிக்கும் விபத்துகள் தொடருது. இரண்டு, மூன்று சக்கர வாகனங்களுக்கு இந்த சாலையில் அனுமதி இல்லைன்னு சொல்றாங்க. ஆனாலும் கேட்பாரின்றி சாகசங்கள் நடக்குது. குடிபோதை யில் தள்ளாட்டமும், வேகமும் தடுப்புகளில் மோதி விபத்துகளை வரவேற்குறாங்க.
சாவுகளின் எண்ணிக்கை கூடுகிறது. செங்கோட்டையின் புல்லுக்கட்டுக்காரர் பார்வையிட்டார். எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேணும்னு சொன்னாரு. அதன் பின்பும் கூட மூன்று பேர் பலியானாங்க.
ஒவ்வொரு டோல்கேட் பகுதியிலும் நுழைகிற வாகனத்தை, ஓட்டுநரை கட்டாயம் பரிசோதனை செய்ய வேணும். அபராதம், தண்டனை அதிகப்படுத்த வேணும். இல்லாட்டி, விபத்துகளின் பதிவு மேலும் எகிறும்னு காக்கிகளே சொல்றாங்க.
கட்டடங்கள் மீது அக்கறை!
பொன்னான நகரில் மாரடைப்பு மரணங்களை தடுக்க, மருத்துவ வசதி எப்போ கிடைக்கப் போகுதோ. லிட்டில் இங்கிலாந்துன்னு பெருமையா பேசுற சிட்டியில், இதய நோய்க்கு மருத்துவ வசதியின்மையே பெரும் பாதிப்பாக இருக்குது.
இதே கோல்டு சிட்டியில் நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் 60 சதவீதம் பேர் இருப்பதா விபரம் அறிஞ்சவங்க சொல்றாங்க. இதய நோய்க்கு சிகிச்சை பெற வெளியூருக்கு தான் போகணும்.
கட்டடங்களின் கட்டுமானம் மீது அக்கறை காட்டுறவங்க, சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிக்கு கவனம் செலுத்தலையே. உள்ளூரில் மாரடைப்புக்கு வழியற்று சுடுகாடு தான் போய் சேரணுமா? அடிப்படை வசதிக்கு முன்னுரிமை தருவதாக சொடுக்கு போட்டு அதிகாரம் உள்ளவங்க பேசுவதால் என்ன பிரயோஜனம்?
நிதி ஒதுக்கலையா?
மலிவு விலை கேன்டீனுக்கு கட்டடம் மட்டுமே ரெடி. இதனை எப்போ திறக்க போறாங்களோ. திறக்காமல் காலம் கடத்த என்ன காரணமோ. மலிவு விலை உணவு ஏழை ஜனங்களுக்கு எப்போ கிடைக்குமோ. வெறும் கட்டடத்தை பார்த்தபடி இருந்தால் வயிறு நிரம்பிடுமா.
திறக்காததற்கு அரசு நிதி கிடைக்கலயா. அல்லது நிதி கிடைத்தும் அலட்சியம் செய்றாங்களா. இதை திறக்க அரசு உத்தரவு தான் வரலையா. திறப்பு விழாவுக்கு மந்திரி தான் வரணுமா. என்னதான் காரணம்னு தெரியலயே. ஜனங்க இதுக்காக தெருவுக்கு வந்து போராடணுமா. அதுவரை காத்திருக்கணுமான்னு எதிர்பார்ப்பு உள்ளவர்களின் முணுமுணுப்பாக உள்ளது.
பள்ளிகளை மூட முயற்சி!
பொன் விளைகிற நகரில், மூடப்படும் பள்ளிகள் எல்லாம் மைனிங் குடியிருப்பு பகுதியில் தான் அதிகமாக உள்ளன. கோரமண்டல் தொடங்கி மாரிகுப்பம் வரையில் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடிட்டாங்க. அதிலும் மூடியவை எல்லாமே தமிழ்ப் பள்ளிகள்.
தமிழர்கள் பிற மொழி படிக்கிற பள்ளிகளை மூட முயற்சி நடத்தி வராங்க. அதில், பேமஸான இங்கிலீஷ் பள்ளி ஒன்றை மூடவும் தயாராகிட்டாங்களாம். தங்கச் சுரங்க வரைபடத்தில் சுரங்க குடியிருப்பு பகுதிகளை மெல்ல அழிக்கும் உள் வேலைகள் நடத்தி வராங்க. அதில் பள்ளிகள் மாயமாகுது. விளையாட்டு திடல்களை தேட வேண்டி உள்ளது. பகுதிதோறும் இருந்த பால் பண்ணைகள், மாட்டுத் தொழுவங்களை காணவில்லை.
மருத்துவமனை, டிஸ்பென்சரிகள் இருந்த இடமும் தெரியல. தேசப்பிதா, சட்டப்பிதா, முதல் பிரதமர், பல பிரதமர்கள் காலடி பதித்த மைனிங் குடியிருப்பு பகுதிகளை வாழ விடுவாங்களா?