அனல்மின் நிலையங்களின் திறன் பயன்பாடு 2025ம் நிதியாண்டில் 69 சதவீதமாக உயரும்
அனல்மின் நிலையங்களின் திறன் பயன்பாடு 2025ம் நிதியாண்டில் 69 சதவீதமாக உயரும்
ADDED : ஜன 26, 2024 02:28 AM

புதுடில்லி: வருகிற 2024--25ம் நிதியாண்டில், அனல்மின் நிலையங்களின் திறன் பயன்பாடு, 69 சதவீதமாக அதிகரிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' தெரிவித்துள்ளது.
மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு மற்றும் குறைவான அனல் திறன் அதிகரிப்பு ஆகியவற்றால், அனல்மின் நிலையங்களின் திறன் பயன்பாடு, 2025 நிதியாண்டில், 69 சதவீதமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இக்ராவின் மூத்த துணைத்தலைவர் கிரிஷ்குமார் கடம் தெரிவித்ததாவது:
தற்போது கட்டுமானத்தில் உள்ள அனல்மின் திட்டங்களின் திறன் அளவு 30 ஜிகாவாட். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில உற்பத்தி பிரிவுகளில் வரும் இத்திட்டங்கள், அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் இந்த அனல்மின் திட்டங்கள், அனல் திறன் அளவை 2025ம் நிதியாண்டில், 25 ஜிகாவாட்டாக அதிகரிக்க உள்ளது. அதேசமயம் ஆண்டு மின்தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், 2030ம் ஆண்டு வரை, ஆண்டு மின்தேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கூட்டலுக்கு பிறகு, 6 சதவீதத்தைத் தாண்டும் பட்சத்தில், தற்போது உள்ள திட்டங்களின் வாயிலாக கிடைக்கும் அனல்மின் திறன் அளவுக்கு மேலான கூடுதல் திறன் தேவைப்படும்.
ஒருவேளை இதன் வளர்ச்சி 2030 வரை, 7.5 சதவீதமாக இருக்கும் பட்சத்தில், கூடுதல் அனல்மின் திறன் தேவை, 70 ஜிகா வாட்டுக்கு மேல் இருக்கும்.
நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதில், நிலக்கரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு கடந்த நிதியாண்டில், 73 சதவீதமாக இருந்தது.
நிதியாண்டு 2024 முதல் 2030க்கு இடைப்பட்ட காலத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அளவு 200 ஜிகாவாட் என்று உயரும் பட்சத்தில், நிலக்கரியின் பங்கு, 58 முதல் 60 சதவீதமாக குறையும்.
இருப்பினும், 2030ம் ஆண்டு வரை, மின் உற்பத்தியில், நிலக்கரி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

