ADDED : ஜூன் 22, 2025 12:51 AM

சென்னை:'ஹோண்டா கார்ஸ்' நிறுவனம், 'சிட்டி ஸ்போர்ட்' என்ற சிறப்பு எடிஷன் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் இதன் விலை, 14.89 லட்சம் ரூபாய்.
ஹோண்டா சிட்டி காரின் செயல்திறன், டிசைனில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், புதிய முன்புற கிரில், ரூப், ஸ்பாயிலர், ஷார்க் பின் ஆண்டனா, வெளிப்புற கண்ணாடிகள் ஆகியவை முழு கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள 16 அங்குல அலாய் சக்கரங்கள் சாம்பல் நிறத்தில் வந்துஉள்ளன.
உட்புற கேபின், சிவப்பு அலங்காரத்துடன் முழு கருப்பு நிறத்தில் உள்ளது. சிவப்பு தையல்களுடன் பிரீமியம் லெதர் சீட்டுகள், உட்புற ரூப், கதவுகள், ஏசி வென்ட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் கருப்பு நிறத்தில் வந்துள்ளன.
வி - சி.வி.டி., மாடல் காருடன் ஒப்பிடுகையில், உட்புற அலங்கார விளக்குகள், அடாஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்டவை கூடுதலாக வழங்கப்படுகின்றன.
இந்த காரில் ஏற்கனவே உள்ள, அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர், ஐ.வி., டெக் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மைலேஜ், 18.4 கி.மீ., வரை தருகிறது.
மொத்தம் மூன்று நிறங்களில் வரும் இந்த கார், 7 - ஸ்பீடு, 'சி.வி.டி.,' ஆட்டோ கியர் பாக்ஸில் மட்டும் கிடைக்கிறது.