ADDED : ஜூன் 02, 2025 11:25 PM
சென்னை : தமிழகத்தில் கிராபைட் செதில்களை மேம்படுத்துவதற்கான ஆலை அமைக்க யாரும் முன்வராத நிலையில், இதற்கான ஒப்பந்த விதிகளை தளர்த்த, அரசு கனிம வளத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
பென்சில் முதல் மின் வாகன பேட்டரிகள் தயாரிப்பது வரை, பல்வேறு நிலைகளில் கிராபைட் மிக முக்கிய பொருளாக உள்ளது. தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கிராபைட் அதிகமாக இருப்பது, 50 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப் பயன்படுத்தும் நோக்கில், தமிழக கனிம நிறுவனமான 'டாமின்' இங்கு கிராபைட் ஆலை அமைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த 1994ல் கிராபைட் ஆலை அமைக்கப்பட்டது.
இருப்பினும், கிராபைட் வெட்டி எடுக்கப்படும் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படாததாலும், குறிப்பாக கிராபைட் சார்ந்த உப தொழில்கள் இப்பகுதிகளில் துவங்கப்படாததாலும், ஆலையின் வளர்ச்சி குன்றியது.
இதையடுத்து, கிராபைட் செதில்களை சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுத்து, மறுசுழற்சி செய்து விற்பனை செய்யும் ஆலையை, தனியார் வாயிலாக அமைக்க, கனிமவளத் துறை முடிவு செய்தது. இதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்தது.
இதையடுத்து, இதற்குரிய நிறுவனங்களை தேர்வு செய்ய ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் பங்கேற்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால், ஒப்பந்த நிபந்தனைகளை தளர்த்துவது மற்றும் பிற சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.