ADDED : ஜூன் 02, 2025 10:39 PM
சென்னை :சியல் ஹெச்.ஆர்., என்ற மனிதவள சேவை நிறுவனத்தின் வருவாய், 2025ம் நிதியாண்டில், 38.57 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, முந்தைய நிதியாண்டில், 1,085.70 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 1,504.50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் 35.21 சதவீதம் அதிகரித்து, 14.67 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம், மனிதவள சேவை பிரிவின் ஆண்டு வருவாய், 37.71 சதவீதமும், மனிதவள தளங்கள் சார்ந்த வர்த்தகப் பிரிவின் வருவாய், 61.69 சதவீதமும் உயர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பிளாக்செயின் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அறிவார்ந்த, தானியங்கி முறையில் செயல்படும் மனிதவள தளத்தை, இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
ஒரு நிறுவனத்தில், பணியாளர் செயல்பாடுகளில் உள்ள ஒவ்வொரு கட்டத்தையும் நவீனப்படுத்த, இது உதவுகிறது. அதாவது, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதில் இருந்து துவங்கி, நிறுவன விதிமுறைகளை பின்பற்றும் வரை அனைத்தையும் மேம்படுத்துகிறது.