உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு
உள்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 24, 2024 01:32 AM
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகள் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கின்றன. இதற்காக, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 111 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.4 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த பணிகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில், மாநிலங்களும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஊக்குவிக்கப்பட உள்ளது. இதற்காக, மாநிலங்களுக்கு, வட்டியில்லா நீண்ட கால கடன் வழங்க, 1.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகளில், மத்திய, மாநில அரசுகளைத் தவிர, தனியார் பங்களிப்பையும் ஈடுபடுத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனைக்குப் பின், கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என்று, தன் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுதும், 25,000 கிராமப் பகுதிகளுக்கு, பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் நான்காவது கட்டத்தில், சாலை வசதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
இதைத்தவிர, தொடர்ந்து வெள்ள பாதிப்புகளை சந்தித்து வரும் பீஹாரில், தடுப்புப் பணிகள் மேற்கொள்ள, 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். குறிப்பாக கோசி - மேச்சி நதிகளை இணைப்பது, அதில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை எடுக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதுபோல அடிக்கடி வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் அசாம், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மாநிலங்களிலும், வெள்ள மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.