கார்கேவுக்கு பாராட்டு விழா: காங்., தொண்டர்கள் திட்டம்
கார்கேவுக்கு பாராட்டு விழா: காங்., தொண்டர்கள் திட்டம்
ADDED : ஜூன் 23, 2024 04:05 PM

பெங்களூரு:
லோக்சபா தேர்தலில், கல்யாண கர்நாடகாவில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கிடைக்க செய்த, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பாராட்டு விழா நடத்த ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ், லோக்சபா தேர்தலை கவுரவ பிரச்னையாக கருதியது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற, இலக்கு நிர்ணயித்திருந்தது. வெறும் ஒன்பது தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால் கல்யாண கர்நாடகாவில், அதிக தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காரணம் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
பொருளாதாரம், கல்வி, சமூக ரீதியில் பின் தங்கிய பகுதியான, கல்யாண கர்நாடகாவின் வளர்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2012ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து, கல்யாண கர்நாடகாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது. இந்த சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு, ஒப்புதல் அளித்து அமல்படுத்தியது. கல்யாண கர்நாடகா மேம்பாட்டு ஆணையம் அமைத்து, ஆண்டுதோறும் சிறப்பு நிதி வழங்குகிறது.
கல்யாண கர்நாடகாவுக்கு சிறப்பு நிதியுதவி கிடைக்க, அன்றைய மத்திய அரசில் அமைச்சராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், கல்யாண கர்நாடகா பகுதியின் ராய்ச்சூர், கலபுரகி, கொப்பால், பல்லாரி, பீதர் தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதற்கு தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம், உருக்கமான பேச்சு காரணம்.
எனவே கலபுரகியில் இவருக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் பிரமாண்ட அளவில் பாராட்டு விழா நடத்த, ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன், ஆலோசனை நடத்தி தேதி முடிவு செய்ய உள்ளனர். சட்டசபை கூட்டம் முடிந்த பின், பாராட்டு விழா ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
***