கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்: ஜாமின் மனு ஒத்திவைப்பு
கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்: ஜாமின் மனு ஒத்திவைப்பு
UPDATED : ஜூன் 01, 2024 04:13 PM
ADDED : ஜூன் 01, 2024 02:50 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, கெஜ்ரிவால் நாளை மீண்டும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் வழக்கமான ஜாமின் கேட்டு, அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(ஜூன் 01) விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறை வாதம்
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், '' பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து தவறான கருத்துகளை கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிரானது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம். அதில் விசாரணை நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது'' என வாதிடப்பட்டது.
இதையடுத்து, நீங்கள் மீண்டும் சரண் அடையப் போகிறீர்களா? என டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி காவேரி கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு, எனக்கு எந்த நிவாரணமும் நீதிமன்றம் வழங்கவில்லை எனில், வேறு எந்த வாய்ப்பும் இல்லை. சரணடைவேன் என கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு மீதான விசாரணை ஜூன் 5ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, கெஜ்ரிவால் நாளை மீண்டும் சிறை செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. நாளை மதியம் மீண்டும் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வார் என டில்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.