ADDED : ஜூன் 01, 2024 07:26 AM

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.பி.க்களுக்கு பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள், வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், தேர்வாகும் எம்.பி.க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் வளாகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, லோக்சபாவுக்கு தேர்வாகும் புதிய எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் பார்லிமென்ட் இணைப்பு கட்டடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தின் மாலை முதல் புதிய எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வளாகம் நோக்கி படையெடுக்க துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எம்.பி.,க்களை வரவேற்கும் வகையில் வரும் 9ம் தேதி வரை டில்லி ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சிறப்பு குழுக்களை அமைத்து அவர்களுக்கு வழிகாட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், பழைய எம்.பி.,க்கள், அரசு குடியிருப்புகளை காலி செய்ய குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்படும். எனவே, புதிய எம்.பி.,க்கள் தங்க, மாநில அரசுகளின் இல்லங்களில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.