கங்கையாற்றில் வெள்ளம் அடித்து செல்லப்பட்ட கார்கள்
கங்கையாற்றில் வெள்ளம் அடித்து செல்லப்பட்ட கார்கள்
ADDED : ஜூன் 30, 2024 02:53 AM

ஹரித்வார்: ஹரித்வாரில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்ட ஏராளமான கார்கள், கங்கையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார், ஹிந்துக்களின் வழிபாட்டு தலமாக விளங்குகிறது. கங்கையாற்றங்கரையில் அமைந்துள்ள இங்கு யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியர் என ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக, வாகன நெரிசல் அதிகரித்து காணப்படும்.
இங்கு கங்கை ஆற்றின் துணை ஆறான சுகி ஆற்றுப்படுகை எப்போதும் வறண்ட நிலையில் காணப்படுவதால், அங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று கங்கை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, சுகி ஆற்றுப்படுகையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதை, அப்பகுதி மக்கள், தங்கள் மொபைல் போன்களில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இது வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்களை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையே, உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூலை 4ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்கை கரையோரம் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு மாநில அரசு அப்புறப்படுத்தியது. இதேபோல் நீர் நிலைகளுக்கு செல்லும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் உத்தரகண்ட் அரசு அறிவுறுத்தியுள்ளது.