UPDATED : ஜூன் 30, 2024 07:57 AM
ADDED : ஜூன் 30, 2024 05:39 AM

சென்னை: இந்திய தணிக்கை துறை தலைவரின், 2023ம் ஆண்டுக்கான அறிக்கையில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறைகளில், ஒப்பந்தப் பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டர்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களே பங்கேற்றுள்ளதும், அவர்களுக்கே அப்பணிகள் வழங்கப்பட்டுள்ளதும் அம்பலமாகி உள்ளது.
சட்டசபையில் நேற்று இந்திய தணிக்கை துறை தலைவரின், 2023ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:
ஒப்பந்ததாரர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போது, ஒரு ஒப்பந்ததாரர் மற்றொரு ஒப்பந்ததாரர் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதால், ஒப்பந்தப் புள்ளிகளில் முறைகேடு செய்ய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.
கணவன் - மனைவி
குறிப்பாக, 35 டெண்டர்களை மாதிரியாக தேர்வு செய்து ஆராய்ந்ததில், குடும்ப உறுப்பினர்களாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, அந்த பணிகள் தரப்பட்டிருப்பது தெரிகிறது.
அதில், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 27 டெண்டர்களிலும், நீர்வளத்துறை சேலம் நிர்வாக பொறியாளர் ஆறு டெண்டர்களிலும், சேலம் ஊரக வளர்ச்சி முகமை நபார்டு மற்றும் கிராமப்புற சாலை வட்டத்தில் தலா ஒரு டெண்டரும் இடம் பெற்றுள்ளன.
சேலம் நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு, தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் ஆறு டெண்டர்களை வெளியிட்டது. அதில், டெண்டர் விதிமுறைகளை மீறியும், என்.ஐ.டி., மற்றும் உலக வங்கி கொள்கையை மீறியும், குடும்ப உறுப்பினர்களை கொண்ட இரு ஒப்பந்ததாரர்களுக்கே பணிகள் தரப்பட்டுள்ளன, ஒரு டெண்டரில் தந்தை, மகன் பங்கேற்று பணி எடுத்துள்ளனர்.
ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இரு ஒப்பந்ததாரர்கள், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் எம்.துரைசாமி ஆகியோர், ஒரே முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணுடன், டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஒப்பந்ததாரர்கள், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்ட 27 டெண்டர்களிலும் பங்கேற்றனர். அனைத்து டெண்டர்களிலும், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம், 'எல் 1' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், மல்லையன் இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஜெயகுமார், எம்.துரைசாமியின் மகன் என்பது தெரியவந்தது. 27 டெண்டர்களுக்கான ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் போது, ஒப்பந்ததாரர்கள் இருவரும், எம்.துரைசாமியின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றினர்.
பிழையானது
அதில், 26 டெண்டர்களில், 20ல் ஒரே ஐ.பி., முகவரியில் இருந்து ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்கண்ட டெண்டர்களில் கூட்டு ஏல செயல்முறை நடந்ததாக தணிக்கையில் தெரியவந்தது.
இதுபற்றி எடுத்து சொன்னதும், தணிக்கை துறையால் சுட்டிக்காட்டப்பட்ட இனங்களில் தொழில்நுட்ப மதிப்பீடு பிழையானது என்று ஏற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை கூறியது.
ஒரு தனி நபரோ அல்லது தனிப்பட்ட நிறுவனமோ, ஒரே பணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டெண்டர்களை சமர்ப்பிக்கும் போது, அந்த ஒப்பந்ததாரருக்கு இத்தனை நபருடனோ அல்லது நிறுவனத்துடனோ தொடர்பு இருக்குமானால், ஒப்பந்ததாரர் தகுதியிழப்புக்கு பரிசீலிக்கப்படுவார் என்பது விதி.
ஏற்கத்தக்கதல்ல
நபார்டு மற்றும் ஊரக சாலை வட்டம், சேலம் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்துவதற்காக, மூன்று பணிக்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டன.
இரு ஒப்பந்ததாரர்கள், அதாவது பி.ரெயின் கட்டுமான நிறுவனம் மற்றும் பி.ரெயின் ஆகியோர் டெண்டரில் பங்கேற்றனர். பி.ரெயின் கட்டுமான நிறுவனத்திற்கு, 5.70 கோடி ரூபாய் மதிப்பில், 2020 ஆகஸ்டில் பணி வழங்கப்பட்டது.
இணையதளத்தில் பதிவேற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்த டெண்டரில் பங்கேற்ற இரு ஒப்பந்ததாரர்களுமே தந்தை, மகன் என்பது தெரியவந்தது. மேலே குறிப்பிட்ட டெண்டரில், ஒப்பந்ததாரர்கள் இருவரும் தனித்தனியே விண்ணப்பித்துள்ளதாக, துறை பதில் அளித்தது.
டெண்டர்களை இறுதி செய்யும் போது, விதிகளை கவனத்தில் கொள்ளாதததால், துறையின் பதில் ஏற்கத்தக்கதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.