மேகதாது திட்டத்துக்கு தீர்வு காண மத்திய இணை அமைச்சர் யோசனை
மேகதாது திட்டத்துக்கு தீர்வு காண மத்திய இணை அமைச்சர் யோசனை
ADDED : ஜூன் 16, 2024 07:35 AM
ராம்நகர்: ''மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அமர்ந்து பேச்சு நடத்தினால், மேகதாது திட்டத்துக்கு தீர்வு கிடைக்கும்,'' என, மத்திய ரயில்வே மற்றும் ஜலசக்தி துறை இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
முட்டுக்கட்டை
மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற சோமண்ணா ராம்நகர், கனகபுராவில் உள்ள ஸ்ரீதேகுலா கோவிலுக்கு நேற்று வருகை தந்து தரிசனம் செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:
மேகதாது திட்டம் இயற்கை சம்பந்தப்பட்ட விஷயம். கர்நாடக அரசு, மத்திய அரசு, தமிழகம், புதுச்சேரி அரசுகள் அமர்ந்து பேச்சு நடத்தி, மேகதாது திட்டத்தின் பிரச்னையை சரி செய்து கொள்ளலாம். அமர்ந்து பேசினால், எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், தீர்ந்துவிடும். சட்டப்படி என்ன நடக்குமோ, அது நடக்கும்.
புதிய ரயில்வே திட்டங்களுக்கு, மாநிலங்களே முட்டுக்கட்டையாக உள்ளன. திட்டத்துக்கு தேவையான இடமும், நிதியும் வழங்க வேண்டும்.
10 ஆண்டு அனுபவம்
நமது மாநிலத்தில் மட்டுமின்றி, நாடு முழுதும் ரயில்வே லெவல் கிராசிங் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மல்லிகார்ஜுன கார்கே பதவி காலத்தில், கனகபுரா, சாம்ராஜ்நகர் ரயில்வே பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
அன்றைய எம்.பி., துருவ நாராயணா நெருக்கடி கொடுத்ததால், பணிகள் துவக்கப்பட்டன. ஆனால் பணிகள் நின்றுள்ளன. நரேந்திர மோடி பிரதமரான பின், ஒரு மணி நேரத்தில் எங்களை முடுக்கி விட்டுள்ளார்.
மாநிலத்தில் பத்து ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. இந்த அனுபவத்தை பயன்படுத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சராக பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.